மேடான்: இந்தோனீசியாவின் சுமத்ரா தீவை ஏறத்தாழ 300 ரோஹிங்கிய அகதிகள் அடைந்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். படகு மூலம் அந்த அகதிகள் வருவதைப் பார்த்ததாகவும் அவர்கள் கரை சேர உதவி செய்ததாகவும் உஜோங் பிளாங் கிராமத்தின் தலைவர் திரு முனிர் கட் அலி தெரிவித்தார்.
கரை சேர்ந்த அகதிகளில் 102 ஆடவர்களும் 181 பெண்களும், 14 சிறுவர்களும் அடங்குவர். அவர்களில் குறைந்தது ஒருவருக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டதாகவும் அவரை மருத்துவ
மனைக்குக் கொண்டு சென்றதாகவும் அப்பகுதியின் ராணுவத் தலைவர் ரொனி மகேந்திரா தெரிவித்தார். அகதிகளுக்கு கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை செய்யப்படும் என்றார் அவர். அதையடுத்து, அவர்கள் தங்குவதற்கு இடம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
அகதிகள் கடலில் எத்தனை நாட்களுக்கு இருந்தனர் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. மியன்மாரைச் சேர்ந்த சிறுபான்மை இனத்தவர்களான ரோஹிங்கிய மக்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் வன்முறையைக் கட்டவிழ்த்து வருவதாகக் கூறப்படுகிறது. வன்முறையிலிருந்து தப்பிக்க ரோஹிங்கிய மக்கள் மற்ற நாடுகளில் அடைக்கலம் நாடுகின்றனர்.


