லண்டன்: பிரிட்டனின் பர்மிங்ஹம் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் தொடர்பாக ஆடவர் ஒருவரை பிரிட்டிஷ் போலிசார் நேற்று கைது செய்தனர்.
பிரிட்டிஷ் நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை நிகழ்ந்த தாக்குதலில் 23 வயது ஆடவர்
ஒருவர் மரணம் அடைந்தார்.
மொத்தம் ஏழு பேர் காயமுற்றனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் ஆடவரை போலிசார் வலைவீசித் தேடினர்.
இந்நிலையில், 27 வயது சந்தேக நபர் பிரிட்டிஷ் நேரப்படி நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். இரண்டு மணி நேரத்தில் நான்கு வெவ்வேறு இடங்களில் கத்திக்குத்துத் தாக்குதல் நிகழ்ந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் இந்தத் தாக்குதலுக்கும் குண்டர் கும்பல்கள் அல்லது பயங்கரவாதத்துக்கும் தொடர்பு இல்லை என்று போலிசார் நம்புகின்றனர்.

