கோலாலம்பூர் விமான நிலையத்தில் 200 மலேசியர்கள் காத்திருப்பு; புதிய விதிமுறையால் குழப்பத்தில் ஊழியர்கள்

கோலாலம்பூர் விமான நிலையத்தில் 200 மலேசியர்கள் காத்திருப்பு; புதிய விதிமுறையால் குழப்பத்தில் ஊழியர்கள்

1 mins read
d9af9da2-3e0d-455d-8ae6-89fd6e486c21
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று சுமார் 200 மலேசியர்கள் பல மணி நேரமாக சிக்கிக்கொண்டனர். படம்: இபிஏ -

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று சுமார் 200 மலேசியர்கள் பல மணி நேரமாக சிக்கிக்கொண்டனர்.

23 நாடுகளிலிருந்து மலேசியாவுக்குச் செல்ல தடை விதிக்கப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து பயணிகளிடையே இதுகுறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் காத்திருப்புப் பகுதியில் 10 மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் இருக்க நேரிட்டது.

விமான நிறுவன ஊழியர்கள், விமான நிலையப் பணியாளர்கள், குடிநுழைவு அதிகாரிகள் ஆகிய தரப்பினர், புதிதாக நடப்புக்கு வந்துள்ள விதிமுறை அவர்களுக்குப் பொருந்துகிறதா என்பதை விசாரித்தனர்.

இதுகுறித்து குடிநுழைவு அதிகாரிகளை ஊடகங்கள் தொடர்புகொண்டு கேட்டதற்கு, முறையான ஆவணங்கள் வைத்திருக்கும் மலேசியர்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

கொவிட்-19 சம்பவங்கள் அதிகமாக உள்ள 23 நாடுகளிலிருந்து மலேசியாவுக்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை மலேசியர்களுக்குப் பொருந்தாது என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருந்தார்.

பிரிட்டனிலிருந்து நேற்று காலை 6.30 மணியளவில் கோலாலம்பூருக்கு வந்த 50 மலேசியர்களில் ஒருவரான திருமதி ஜோலின் யாப், விமானத்திலிருந்து வெளியேறி குடிநுழைவு முகப்புகளுக்குச் செல்ல தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறினார்.

பிரிட்டனில் உள்ள மலேசியத் தூதரகம் வழங்கிய கடிதத்தை அதிகாரிகளிடம் காட்டியும் குடிநுழைவு முகப்புகளுக்குச் செல்ல விமான நிலைய ஊழியர்கள் அனுமதிக்கவில்லை என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்