பெய்ஜிங்: சீனாவில் கொவிட்-19க்கு எதிரான "மக்களின் போரில் முன்னின்ற நாயகர்களை" சீன அதிபர் ஸி ஜின்பிங் நேற்று கௌரவித்தார். நாட்டின் மீள்திறனையும் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.
சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு நோய்ப் பரவுவதை ஆரம்பத்தில் கட்டுப்படுத்த சீனா தவறிவிட்டதாக அமெரிக்கா உட்பட மற்ற நாடுகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்த திரு ஸி, தொடக்கத்திலிருந்து இப்போது வரை இந்த விவகாரத்தில் சீனா வெளிப்படையாக நடந்துகொண்டதாகச் சொன்னார். உயிர்களைக் காப்பாற்ற சீனா முக்கியமான முடிவுகளை எடுத்ததாக அவர் கூறினார்.
நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அதிபர் ஸியின் பங்கு குறித்து சீன அரசாங்க ஊடகம் அடிக்கடி வலியுறுத்தி வந்தது. அந்த வகையில், ஸின்ஹுவா செய்தி நிறுவனம் நீண்ட செய்தி அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. அதில், கடந்த ஜனவரி முதல் கொவிட்-19க்கு எதிராக அதிபர் ஸி அயராது போராடி வந்ததாகவும் பல நாட்களாக அவர் தூங்கவில்லை என்றும் அது கூறியது.
"உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்ற சீனா உதவியுள்ளது," என்று மருத்துவத் துறை பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் திரு ஸி கூறினார்.
"அசாதாரணமான, வரலாற்றுமிக்க இந்தச் சோதனையில் நாங்கள் தேர்ச்சி அடைந்துவிட்டோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
நோய்ப் பரவல் சூழலில் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிவிட்ட முதல் சில நாடுகளில் சீனாவும் ஒன்று என்று கூறிய அவர், நாட்டின் மீள்திறனையும் உறுதியையும் இது காட்டுவதாகச் சொன்னார்.
மருத்துவத் துறையைச் சேர்ந்த நான்கு "நாயகர்களுக்கு" தங்கப் பதக்கங்களை திரு ஸி வழங்கி கௌரவித்தார்.
தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விருது நிகழ்ச்சியின் தொடக்கத்தில், கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நோய்ப் பரவல் எங்கிருந்து தொடங்கியது என்பதை ஆராய்வதற்குப் பதிலாக தொற்றை வெற்றிகரமாக முறியடித்திருப்பதில்தான் பெய்ஜிங் கவனம் செலுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹுபெய் மாநிலம், வூஹான் நகரில் நோய் பரவத் தொடங்கியதும் அந்தப் குதியில் கடுமையான முடக்கநிலையும் பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.

