ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி நிறுவனம் கொவிட்-19 தடுப்பூசி மருந்தை பரிசோதனைக்காக மக்களுக்கு வழங்குவதை நிறுத்தியுள்ளது. அந்த தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்ட ஒருவருக்கு கடுமையான பக்க விளைவு ஏற்பட்டிருப்பதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சோதனையில் பங்கேற்ற அந்த நபருக்கு விளக்க முடியா பக்க விளைவு ஏற்பட்டுள்ளதாகவும் ஆஸ்ட்ராசெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பக்க விளைவுக்கான காரணம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அதனையடுத்து, அந்த நிறுவனத்தின் பங்கு விலைகள் இன்று காலை லண்டனில் சுமார் 3% சரிந்தன.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் சேர்ந்து ஆஸ்ட்ராஸெனகா நிறுவனம் தயாரித்த தடுப்பு மருந்து, கொவிட்-19க்கு எதிரான தடுப்பு மருந்தாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.
முதல் இரண்டு கட்ட சோதனைகளை வெற்றிகரமாகக் கடந்து வந்த ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ரா செனெகா கொரோனா தடுப்பூசி அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா உட்பட 30,000 பங்கேற்பாளருக்கு சோதனை செய்யும் 3ஆம் கட்ட சோதனை நிலைக்கு வந்ததையடுத்து இந்த தடுப்பூசி மருந்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டது.
கிட்டத்தட்ட அந்த தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனை நிலையை எட்டிய நிலையில், பக்க விளைவு காரணமாக, சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதார இணையத்தளமான ஸ்டாட் நியூஸ் வெளியிட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மக்களிடம் சோதனை செய்யும் அளவுக்கு இந்த தடுப்பூசி வளர்ந்து வந்தது.
அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பங்கேற்பாளர் குணமடைந்து வருவதாகவும் ஸ்டாட் நியூஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
மருத்துவ பரிசோதனையின் போது , விவரிக்க முடியாத உடல் நலக்குறைவு பிரச்சினை ஏற்படும் போது இத்தகைய நடைமுறைகள் கையாளப்படுவது வழக்கமான ஒன்றுதான். பெரிய அளவில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் போது, எதேச்சையாக சில சமயங்களில் உடல் நலக்குறைவு ஏற்படும். இந்த பிரச்சினைகளை தன்னிச்சையாக கண்டிப்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆய்வில் பங்கேற்ற அவருக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவு, தடுப்பு மருந்தால் ஏற்பட்டதாக இல்லாதிருக்கவும் சாத்தியம் உண்டு என்று ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த இடையூறுகளுக்கிடையே, கொவிட்-19க்கான தடுப்பு மருந்து நவம்பர் 3ஆம் தேதிக்குள் கிடைப்பதற்கான சாத்தியம் குறைவு என்று கூறப்படுகிறது.

