கோலாலம்பூர்: மலேசியாவின் கெடா மாநிலத்தில் உருவான கொரோனா கிருமித்தொற்று பினாங்கு, பெர்லிஸ் ஆகிய இடங்களுக்கும் பரவியுள்ளது. நாட்டின் வடபகுதி பெரும் கிருமிப் பரவலை எதிர்நோக்கியுள்ளதற்கான அறிகுறி இது என்று கூறப்படுகிறது.
மலேசியாவின் 'சிவகங்கை கிருமித்தொற்று குழும'த்தால் கெடாவில் கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரிக்குமென அஞ்சினர் அறிவியல் சமூகத்தினர். கிருமித்தொற்று இருந்தும் அறிகுறிகள் தென்படாத பலரால் கிருமித்தொற்று குழுமங்கள் அதிகளவில் உருவாகத் தொடங்கியதைக் கண்டு அச்சம் தலைதூக்கியுள்ளதாக கிருமி நோய்த் தொற்று நிபுணர் சஸாலி அபு பக்கர் தெரிவித்துள்ளார்.
"கெடா மாநிலத்திலுள்ள அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி கிருமித்தொற்று குழுமங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அதுவரை நோய் முறியடிப்பு நடவடிக்கைகளை மீறுவதில் உள்ள அபாயத்தை மக்களுக்கு சுகாதார அதிகாரிகள் விளக்க வேண்டும்," என்று திரு சஸாலி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகை பேட்டியில் கூறியுள்ளார்.
"எளிமையான வாழ்க்கை வாழ்வதால் இந்த நோய் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ளவர்களையே பாதிக்கும் என்ற தவறான எண்ணத்தில் பலர் உள்ளனர். இதனால்தான் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மீறி பெர்லிஸ் மாநிலத்திற்கு பொருள் வாங்கவும் கெந்தூரி விருந்து வைக்கவும் மக்கள் புறப்படுகின்றனர்," என்று அவர் தமது வருத்தத்தைத் தெரிவித்தார்.
"நோயின் அபாயங்களை விளக்கிச் சொல்லத் தவறுவது, நோய் முறியடிப்பு நடவடிக்கைகளை மீறி நடப்பது போன்றவை பட்டவர்த்தனமாகத் தெரியும் சுகாதார அமைச்சின் குறைபாடுகள் என்றார் அவர்.

