தென்கிழக்காசிய நாடுகளுக்கு பொம்பியோ அறைகூவல்

2 mins read
72e59932-f3b2-4b01-9be9-bd8c9fc67204
படம்: ஏஎஃப்பி -

தென்சீனக் கடல் பகுதியில் தீவுகளை உருவாக்க உதவி வரும் சீன நிறுவனங்களுடனான உறவை அறுத்துக்கொள்ளுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ தென்கிழக்காசிய நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா சர்ச்சைக்குரிய நீரிணைப் பகுதியில் பணியாற்றி வந்த 24 நிறுவனங்களை அதன் தடைகள் பட்டியலில் சேர்த்துள்ளதை அடுத்து திரு பொம்பியோ இவ்வாறு கூறினார். தென்சீனக் கடலில் வேலை செய்யும் நிறுவனங்களுடன் தாங்கள் கொண்டுள்ள உறவை மறுமதிப்பீடு செய்ய இதுவே நேரம் என்று அவர் ஆசியானின் பத்து வெளியுறவு அமைச்சர்களிடமும் மெய்நிகர் சந்திப்பின்போது அவர் வலியுறுத்தினார்.

"ஆதரவுக் குரல் மட்டும் கொடுக்காமல் செயலில் இறங்குங்கள்," என்றார் அவர்.

தென்சீனக் கடலில் உள்ள ஆசியான் கரையோர நாடுகளை அச்சுறுத்தும் நிறுவனங்களுடன் உள்ள வர்த்தக ஒப்பந்தங்களை மீண்டும் மறுஆய்வு செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார்.

"சீன கம்யூனிஸ்ட் கட்சி நம் மீதும் நம் மக்கள் மீதும் மிதித்துசெல்ல விடாதீர்கள்," என்றார். கூட்டத்தை வழிநடத்திய தலைமை தாங்கும் வியட்நாம், அண்மைய நாட்களில் ராணுவமயமாக்கப்பட்டுள்ள கடல் பகுதி குறித்து பெரும் கவலை தெரிவித்தது.

இதனால் நம்பிக்கை குறைந்துள்ளதுடன் பதற்றத்தை அதிகரிக்கச் செய்து வட்டாரத்தின் அமைதி, பாதுகாப்பு, சட்டத்தின் விதிமுறைகள் ஆகியவற்றை வலுவற்றதாக்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் பாம் பின் மின் தெரிவித்தார். இருப்பினும், தனக்கு சீன முதலீடு தேவைப்படுகிறது என்றும் அமெரிக்காவின் சொல்லுக்கு அடிபணிந்து நடந்துகொள்ளாது என்றும் பிலிப்பீன்ஸ் சென்ற வாரம் கூறியிருந்தது.

சர்ச்சையானதன் பின்னணி

தென்சீனக் கடலின் பெருவாரியான பகுதி தனக்கே சொந்தம் என்று சீனா கூறி வருகிறது. வரலாற்று உரிமைகள் முதல் முக்கிய வர்த்தக நீர்வழி வரை அது ஆதாரங்களாக சுட்டுகிறது.

சீனா பிரகடனப்படுத்தியுள்ள அதே கடற்பகுதி குறித்து வியட்நாம், பிலிப்பீன்ஸ், மலேசியா, புருணை, தைவான் ஆகிய நாடுகளும் சொந்தம் கொண்டாடுகின்றன.