நீதிபதி: குற்றவாளி என்ற தீர்ப்புக்கு பின்னும் நஜிப் வருத்தப்பட்டதாக தெரியவில்லை

நீதிபதி: குற்றவாளி என்ற தீர்ப்புக்கு பின்னும் நஜிப் வருத்தப்பட்டதாக தெரியவில்லை

1 mins read
5a0bf494-91c8-4af7-9d7e-7b04a65bb208
படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது தொடுக்கப்பட்ட '1எம்டிபி' வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

நம்பிக்கை மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் மோசடி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதன் மிக மோசமாக வகை என்றெல்லாம் உயர் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பில் கூறியுள்ளார்.

இருப்பினும் இவ்வாண்டு ஜூலை 28ஆம் தேதியன்று நஜிப் மீதான 28 ஊழல் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டபோது, அவர் எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை என்றார் நீதிபதி முகம்மது நஸ்லான் கஸாலி.

தமது தீர்ப்பின் 801 பக்கங்கள் கொண்ட தன் அறிக்கையில் நீதிபதி இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதியிடம் நேரடியாகப் பேசியபோது பிரதமராக தன் ஒன்பது ஆண்டுகால சாதனைகளை நஜிப் விவரித்ததாகவும் தன் வங்கியில் பணம் எப்படி வந்தது என்று தனக்குத் தெரியாது என இஸ்லாமிய உறுதிமொழியை மேற்கோள் காட்டியதாகவும் கூறப்பட்டது.

நஜிப் தன் பதவிக்காலத்தில் நாட்டுக்காக சேவையாற்றி இருந்தாலும் அவர் அறிவாற்றல் மிகுந்தவர் என்றும் சரி எது தவறு எது என்பதை அறிந்திருப்பார் என்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.