சிங்கப்பூர் எல்லைக் கட்டுப்பாட்டை முழுமையாக நீக்குவது பற்றி தகவல்
தினந்தோறும் பயணிகளை அனுமதிக்கும் வகையில் மலேசியா-சிங்கப்பூர் எல்லையை ஜனவரி முதல் முழுமையாகத் திறந்துவிடுவதற்கான சாத்தியம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.
மலேசியாவில் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளுடனான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எந்த அளவுக்குப் பயன் தந்துள்ளது என்பதைப் பொறுத்து சிங்கப்பூருட னான எல்லையை முழுமையாகத் திறப்பதற்கான சாத்தியம் குறித்து தீர்மானிக்கப்படும் என்று மலேசிய சுகாதார அமைச்சர் ஆதம் பாபா நேற்று தெரிவித்தார்.
கட்டுப்பாடு நடப்பில் உள்ள நான்கு மாத காலத்தில் எல்லைக் கட்டுப்பாடு, தனிமனித இடைவெளி, தனி
நபர் பாதுகாப்புச் சாதனம் போன்ற அம்சங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
எல்லையைத் திறந்துவிடுவதற்கு முன்னர் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் உள்ள காலத்தில் புதிதாக நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என்றார் டாக்டர் ஆதம்.
முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க லெகோலேண்ட் மலேசியா என்னும் ஓய்வுத்தளத்தில் நடைபெற்ற நிகழ்வுக்குப் பின்னர் பேசிய அவர், கொவிட்-19 நோய்த் தொற்றால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலை குறித்து ஆராயப்படும் என்றும் அதன் அடிப்படையில் எல்லையை முழுமையாகத் திறக்கலாமா என்பது குறித்த முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
"நாட்டின் பொருளியலும் முக்கியம்; மக்களின் சுகாதாரமும் முக்கியம். நாம் இரண்டையும் சரிசமமாகப் பார்க்க வேண்டும்," என்று டாக்டர் ஆதம் கூறினார்.
ஜோகூர் மாநில பொருளியல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதால் மலேசிய-சிங்கப்பூர் எல்லை விரைவாகத் திறக்கப்படுவது அவசியம் என்றும் ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகம்மது அண்மையில் தெரிவித்திருந்தார். அவரது கருத்து குறித்துப் பேசிய டாக்டர் ஆதம், டிசம்பர் மாதம் வரை இரு நாடுகளின் கிருமிப் பரவல் நிலைமையை தமது அமைச்சு தீவிரமாக ஆராயவேண்டி உள்ளது என்றும் முழுமையான எல்லை திறப்பு பற்றி அதன் அடிப்படையிலேயே முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.
இருப்பினும் சிங்கப்பூருடனான எல்லையை இயன்றவரை விரைவில் திறக்க வேண்டுமென கூட்டரசை தாம் தொடர்ந்து வலியுறுத்தப்போவதாக திரு ஹஸ்னி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் இரு கட்டுப்பாட்டுத் திட்டங்களின் வழி தற்போது போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இருவழி தடையற்ற பயணம் (ஆர்ஜிஎல்), அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பயண ஏற்பாடுகள் (பிசிஏ) ஆகியன அத்திட்டங்கள்.
ஆகஸ்ட் 31 வரை ஆர்ஜிஎல் திட்டத்தின்கீழ் 320 பேரும் பிசிஏவின்கீழ் 8,270 பேரும் இரு நாடுகளுக்கு இடையில் வந்து சென்றதாக திரு ஹஸ்னி நேற்று முன்தினம் கூறினார்.
இவ்விரு திட்டங்களின் மூலம் சிங்கப்பூருக்கு சென்று வருவோரிடம் தினமும் 2,000க்கும் மேற்பட்ட கொவிட்-19 பரிசோதனை நடத்தும் அளவுக்கு ஜோகூரிடம் வசதி வாய்ப்பு கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"இவ்விரு திட்டங்களின் மூலமான பயணம் மட்டும் போதாது. சிங்கப்பூருக்கு தினமும் சென்று வருவதற்காக எல்லை முழுமையாகத் திறக்கப்பட வேண்டும் என்பதே ஜோகூரின் விருப்பம். ஆர்ஜிஎல், பிசிஏ வரும் முன்னர் இருநாடுகளுக்கும் இடையில் நடமாட்டம் இருந்தது. மருத்துவப் பொருட்களையும் உணவுப் பொருட்களையும் சிங்கப்பூருக்கு மலேசியா அனுப்பி வந்தது," என்றார் அவர்.

