மணிலா: தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா கிருமித்தொற்று மிக அதிகளவிலுள்ள நாடான பிலிப்பீன்ஸ், பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பு தூர இடைவெளி விதிகளை தளர்த்தியுள்ளது.
பொதுப் போக்குவரத்துப் பயணங்களை அதிகரிப்பதற்கும், மீண்டும் வேலைக்குச் செல்லத் தொடங்கியுள்ளவர்களுக்கு போக்குவரத்து வசதியை வழங்குவதற்கும் ஏதுவாக, ரயில்கள், விமானங்களில் அதிக பயணிகள் அனுமதிக்க அந்நாட்டு போக்குவரத்துத் துறை முடிவுசெய்துள்ளது. பிலிப்பீன்சில் நேற்று புதிதாக 4,040 பேருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த 12 நாட்களில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இது. மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அங்கு கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 252,964 ஆகியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் 4,108ஐ எட்டியுள்ளது என்று பிலிப்பீன்ஸ் சுகாதார அமைச்சு கூறியது.
தொற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருந்தபோதிலும், பொருளியல் செயல்பாடுகளை அதிகரிக்கும் நோக்கில் தளர்வுகளை அந்நாடு மேற்கொண்டுகொள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க நிறுவனங்களால் உருவாக்கப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் எந்தவொரு நிபந்தனையும் இன்றி பிலிப்பீன்சுக்கு கிடைக்கும் என்று சுகாதார அமைச்சு கூறியது.
அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பு, செயல்திறனை உறுதிப்படுத்த ஒழுங்குமுறை செயல்முறைக்கு உட்படுத்தப்படும் என்றும் அது தெரிவித்தது.
கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற முயற்சிக்கும் அதிக மக்கள்தொகை கொண்ட வளரும் நாடுகளில் ஒன்றான பிலிப்பீன்ஸ், அமெரிக்க தடுப்பூசி உற்பத்தியாளர்களைச் சந்தித்துள்ளதுடன் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடனும் பேச்சு நடத்தியுள்ளது.

