முடக்கநிலையை தொடர்வது முக்கியம் ஆஸ்திரேலிய மாநிலத் தலைவர்கள் உறுதி

2 mins read
c0ee20ef-2ce9-4867-beba-74ee9c56d8ae
விக்டோரியா மாநிலம், மெல்பர்ன் நகரில் கிருமித்தொற்று பரிசோதனை செய்துகொள்ள வரிசையில் காத்திருக்கும் மக்களிடம் சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர் (நடுவில்) பேசுகிறார்.  படம்: ஏஎஃப்பி -

சிட்னி: ஆஸ்திரேலியாவில் கொவிட்-19 புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதை அடுத்து கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் மத்திய அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு மாநிலத் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மாநிலம் அளவிலான முடக்கங்களும் எல்லை மூடல்களும் அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இரண்டாம் கட்டமாக ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட கிருமிப் பரவல் அண்மைய நாட்களில் மெல்லத் தணியத் தொடங்கியுள்ளது. எனினும், புதிய தொற்றுகளுக்கு அஞ்சி, மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தடை உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் பல மாநிலங்களில் தொடர்கின்றன.

நாட்டில் கிருமித்தொற்று இல்லாத பகுதியைச் சேர்ந்த ஒரு மாதை அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்க மறுத்த மாநில அதி காரிகளின் முடிவை ஆதரித்த குயின்ஸ்லாந்து மாநில முதல்வர் அனாஸ்டாசியா பலாஸ்ஸுக், எல்லைப் பாதுகாப்பு ஊழியர்கள் சிரமமான, கடுமையான முடிவுகளை எடுக்க நிர்பந்திக்கப்பட்டனர் என்றார்.

ஆஸ்திரேலியாவின் தொற்றுநோயை கையாள்வது தொடர்பாக பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கும் மாநிலத் தலைவர்களுக்கும் இடையில் வளர்ந்து வரும் பதற்றநிலைக்கு அந்தக் குடும்பத்தின் அவலநிலை ஒரு முக்கிய விஷயமாகியுள்ளது.

குயின்ஸ்லாந்து அதிகாரிகளின் செயல்பாட்டை விமர்சித்த திரு மோரிசன், முதலில் மாதின் தந்தை உடல்நிலை மோசமாக இருந்தபோது, ​​அவரை மாநிலத்திற்குள் நுழைவதை அவர்கள் தடுத்தனர். அடுத்து, இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு வேண்டும் என்ற மாதின் கோரிக்கையை மறுத்தனர் என்றார்.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மந்தநிலைக்குச் சென்றுள்ள பொருளியலை மீட்பதில் முனைப்பாக உள்ள பிரதமர் மோரிசன், மெல்பர்னில் இரவு ஊரடங்கு உத்தரவை அகற்றுவது குறித்து பரிசீலிக்க விக்டோரியா மாநிலத்தை வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், அம்மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் தனது முடிவில் உறுதியாக உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது கிருமித்தொற்று அலையின் மையமாக இருக்கும் மாநிலத்தின் தலைநகரில் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது முக்கியம் என்றார் அவர்.