உணவகங்களும் சிறு பகுதிவாரிக் கடைகளும் அதிகாலை 2 மணி வரை திறந்திருக்க மலேசிய அரசாங்கம் அனுமதி அளித்து உள்ளது. இந்தப் புதிய தளர்வு நேற்று முதல் நடப்புக்கு வருவதாக மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதாக கடைக்காரர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவை இயங்கும் நேரத்தை நீட்டிக்க தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி அளித்து உள்ளதாக அவர் கூறினார்.
"ஏராளமான கோரிக்கைகள், குறிப்பாக லங்காவி போன்ற சுற்றுலாத்தலங்களில் நிறைய பேர் வேண்டுகோள் விடுக்கிறார்கள். பொழுது போக்குக்கூடங்களில் அனுமதி இல்லை என்பதால் சுற்றுப்பயணிகளுக்கு சாப்பிடவாவது நேர நீட்டிப்பு வேண்டும் என்றும் கோரப்பட்டது. எனவே அதிகாலை 2 மணி வரை திறந்திருக்க உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது," என்று செய்தியாளர்களிடம் கூறினார் திரு இஸ்மாயில் சாப்ரி.
ஜூன் மாதம் முதல் கட்டம் கட்டமாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் மலேசியாவில் உணவகங்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளன. ஆயினும் நள்ளிரவுக்கு மேல் அவற்றுக்கு அனுமதி இல்லை என்ற உத்தரவு நடப்பில் இருந்து. அதில் இனி தளர்வு இருக்கும்.
இதற்கிடையே, பள்ளிவாசல்களில் தொழுகைக்கு தற்போது வெளிநாட்டினர் அனுமதிக்கப்படுவதாக மலாய் மெயில் இணையச் செய்தி கூறியது. கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டினர் பள்ளிவாசல்களைப் பயன்படுத்தக் கூடாது என மலேசிய அரசாங்கம் தடை விதித்து இருந்தது.
சாபா, கெடா மாநிலங்களின் சில பகுதிகளில் கொவிட்-19 கிருமிப் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் மட்டும் நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கி இம்மாதம் 25ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுவதாக திரு இஸ்மாயில் சாப்ரி தெரிவித்தார்.

