தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாபாவைக் கைப்பற்ற முகைதீன் வியூகம்

2 mins read
07253580-14ba-43cf-b1ef-d4c709f19277
படம்: ராய்ட்டர்ஸ் -

கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. சாபாவின் வாரிசான் பிளஸ் அரசாங்கத்தை எதிர்த்துப் போட்டியிட கபுங்கான் ரக்யாட் சாபா கூட்டணியை மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் அமைத்துள்ளார்.

புதிய கபுங்கான் ரக்யாட் சாபா கூட்டணியில் திரு முகைதீனின் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியும் தேசிய முன்னணியும் பெர்சத்து சாபா கட்சியும் இடம்பெறுகின்றன. கூட்டணி அமைத்தால்தான் சாபாவின் முதலமைச்சர் சஃபி அப்டால் தலைமையிலான வாரிசான் பிளஸ் அரசாங்கத்தை எதிர்த்துப் போதுமான வலிமையுடன் போட்டியிட முடியும் என்று கூட்டணியில் இடம்பெறும் அனைத்துக் கட்சிகளும் நேற்று முன்தினம் இணக்கம் தெரிவித்ததாக திரு முகைதீன் தெரிவித்தார்.

பெர்சத்து கட்சியின் சாபா மாநிலத் தலைவர் திரு ஹாஜி முகம்மது நூருக்கு ஆதரவு தெரிவிக்க நேற்று காலை துவாரான் நகருக்குச் சென்றபோது புதிய கூட்டணி குறித்து பிரதமர் முகைதீன் அறிவித்தார். சுலாமான் சட்டமன்றத் தொகுதியில் திரு ஹாஜி முகம்மது நூர் போட்டியிடுகிறார்.

"நாங்கள் அனைவரும் ஒன்றுகூடி எங்கள்புதிய கூட்டணிக்கு கபுங்கான் ரக்யாட் சாபா எனப் பெயரிட முடிவெடுத்தோம். அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து சாபா மாநில சட்டமன்றத்தில் இருக்கும் அனைத்து 73 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. வாரிசான் பிளசைத் தோற்கடித்து சாபா மாநிலத்தின் அடுத்த அரசாங்கமாவதே எங்கள் நோக்கம். எந்த ஒரு கட்சியாலும் தனித்து வெற்றி பெற முடியாது. கபுங்கான் ரக்யாட் சாபா கூட்டணியால் மட்டுமே வலிமைமிக்க நிலையான அரசாங்கத்தை அமைக்க முடியும்," என்று திரு முகைதீன் கூறினார்.

சாபா சட்டமன்றத் தேர்தலில் கபுங்கான் ரக்யாட் சாபா கூட்டணி வெற்றி பெற்றால் திரு ஹாஜி முகம்மது நூர் மாநிலத்தின் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று திரு முகைதீன் சூசகமாக தெரிவித்தார்.

திரு சஃபி அப்டாலின் வாரிசான் சாபா கட்சியை சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவியதை அடுத்து கடந்த ஜூலை மாதத்தில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து சட்டமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துமாறு சாபா ஆளுநரிடம் திரு சஃபி அப்டால் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கையை மாநில ஆளுநர் ஏற்றார்.

இந்நிலையில் சாபா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று காலை 10 மணியுடன் முடிவடைந்தது. பன்முனைப் போட்டி நிலவ இருக்கும் நிலையில் சாபாவின் முன்னாள் முதலமைச்சர் திரு முசா அமான் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரு சஃபி அப்டாலைப் பிரதமர் வேட்பாளராக பெரும்பாலான எதிர்க்கட்சிகள் நியமனம் செய்துள்ளன. ஆனால் இதற்கு

கெஅடிலான் கட்சி மறுப்பு தெரிவித்துவிட்டது. கெஅடிலான் கட்சித் தலைவர் திரு அன்வார் இப்ராஹிமை அது பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது.

சாபா சட்டமன்றத் தேர்தலில் திரு முகைதீனின் பெர்சத்து கட்சியும் பெரிக்காத்தான் நேஷனலும் வெற்றி பெறாவிடில் மலேசியப் பொதுத் தேர்தலில் போட்டியிட அவரது கட்சிக்குப் போதுமான இடங்கள் கிடைக்காமல் போகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.