ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் நீளமான ஜோகூர் கடற்பாலத்தை சிங்கப்பூரர்களும் மலேசியர்களும் சோர்வில்லாமல் நடந்து கடப்பதற்கு வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. அந்தப் பாலத்தில் 350 மீட்டர் தூர நடைபாதை அமைப்பதற்கான 30 மில்லியன் ரிங்கிட் (9.88 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) ஒதுக்கீட்டிற்கு மலேசிய அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக ஜோகூர் அரசு காத்திருக்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இதற்கான திட்டப் பரிந்துரையை புத்ராஜெயாவுக்கு ஜோகூர் மாநில அரசு அனுப்பி வைத்தது என்று மாநில பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்புக் குழுத் தலைவர் சோலிஹான் பட்ரி மலேசியாவின் தி ஸ்டார் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
"தொடக்கத்தில் நடைபாதையை அமைக்க 15 மில்லியன் ரிங்கிட் (4.94 மி. சிங்கப்பூர் வெள்ளி) ஒதுக்கீடு செய்ய நாங்கள் கோரியிருந்தோம். ஆனால் பின்னர் கூரை, மின்படிகளை உள்ளடக்கும் வசதிகளுடன் பாதையை மறுவடிவ மைத்ததால் தற்போது 30 மில்லியன் கேட்கிறோம்," என்றார் அவர்.
நடைபாதையில் குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கோத்தா இஸ்கந்தரில் ஜோகூர் மாநில சட்டசபை அமர்வின்போது நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த திரு சோலிஹான் இந்த விவரங்களைக் கூறினார்.
நடைபாதை திட்டத்தை சிங்கப்பூர் வரவேற்றுள்ளதை அவர் சுட்டினார். "நாங்கள் ஜோகூர் பாருவில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகத்தை சந்தித்து இது குறித்து விவாதித்தோம்.
"சிங்கப்பூரும் நடைபாதையை அமைப்பதில் ஆர்வமாக உள்ளது. ஏனெனில் கடற்பாலத்தில் நடந்து செல்ல வேண்டிய நிலைமையில் உள்ளவர்கள் பற்றி சிங்கப்பூர் அக்கறை கொண்டுள்ளது," என்றார் அவர்.
நடைபாதைத் திட்டத்தை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று தாம் நம்புவதாக அவர் சொன்னார். ஜோகூரிலிருந்து உட்லண்ட்ஸ் வரையில் 1.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபாதை அமைக்கும் திட்டத்தை ஜோகூர் மாநிலம் ஜூன் மாதம் அறிவித்தது.
தற்போதுள்ள பாலத்தின் இருபுறமும் உள்ள மோட்டார் சைக்கிள் பாதையில் இந்த நடைபாதையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பாதை நடப்பவர்களுக்கு, குறிப்பாக வாகன நெரிசல் மிகுந்த உச்சநேரங்களில் பாதுகாப்பானதாகவும் வசதியாகவும் இருக்கும் என்று திரு சோலிஹான் தெரிவித்தார்.

