உலகில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்; ஐரோப்பாவுக்கு எச்சரிக்கை

உலகில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்; ஐரோப்பாவுக்கு எச்சரிக்கை

3 mins read
ff14c0c0-c8a2-4177-aff5-e3a38d88f726
கொரோனா அச்சத்தால் நேரடித் தொடர்பைத் தவிர்க்க இந்த நடைமுறை. படம்: இபிஏ -

இதற்குமுன் இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 307,930 பேர் கொவிட்-19 தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில்தான் அதிகமான பாதிப்புகள் பதிவாகின. இந்தியாவில் 94,372, அமெரிக்காவில் 45,523, பிரேசிலில் 45,523 என புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் இணையத்தளத் தகவல்கள் கூறுகின்றன.

கொரோனா தொற்றால் மேலும் 5,537 பேர் மரணமடைய, மொத்த உயிரிழப்பு 917,417ஆக அதிகரித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கொரோனா தொற்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்க, பிரேசிலில் 874 பேர் மாண்டுபோயினர்.

இதற்குமுன் இம்மாதம் 6ஆம் தேதி 306,857 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததே முந்தைய உச்சமாக இருந்தது. அதேபோல, ஏப்ரல் 17ஆம் தேதி 12,430 இறந்துபோனதே கொரோனாவால் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிர் இழப்பு.

இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் 90,000க்கு மேற்பட்டோரை கொரோனா தொற்றி வந்துள்ளது. அதிகபட்சமாக, அங்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று 97,570 பேரை அக்கிருமி தொற்றியது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.85 மில்லியனை எட்டிவிட்ட நிலையில், அந்நாட்டின் சில பகுதிகளில் மருத்துவ உயிர்வாயு கிடைப்பது குதிரைக்கொம்பாகி இருக்கிறது. 6.5 மில்லியனுக்கு மேற்பட்ட கொரோனா தொற்றுச் சம்பவங்களுடன் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.

அர்ஜெண்டினா, இந்தோனீசியா, மொரோக்கோ, ஸ்பெயின், உக்ரேன் உள்ளிட்ட 58 நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாக 'ராய்ட்டர்ஸ்' பகுப்பாய்வு கூறுகிறது.

அமெரிக்காவில் கடந்த ஜூலை 16ஆம் தேதி அதிகபட்சமாக 77,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவான நிலையில், இப்போது அங்கு கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த உச்ச அளவைக் காட்டிலும் புதிய தொற்றுச் சம்பவங்கள் இப்போது கிட்டத்தட்ட 44% குறைவாகப் பதிவாகி வருகின்றன. பிரேசிலில் நாட்டிலும் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கிவிட்டது.

அடுத்த இரு மாதங்களில் உயிரிழப்பு அதிகமாகலாம்

இதற்கிடையே, ஐரோப்பாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனாவால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படலாம் என எதிர்பார்ப்பதாக அக்கண்டத்திற்கான உலகச் சுகாதார அமைப்பின் இயக்குநர் ஹன்ஸ் குளூக தெரிவித்து இருக்கிறார்.

"ஐரோப்பாவிற்கு அது கடினமான காலகட்டமாக இருக்கலாம்," என்றார் டாக்டர் குளூக.

ஐரோப்பாவில் இப்போதைக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் மரண விகிதம் ஓரளவு நிலையாக இருந்து வருகிறது.

ஆனாலும், கொரோனா தொற்று ஏறுமுகத்தில் இருப்பதால் உயிரிழப்பும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"இந்தத் தருணத்தில் இப்படி ஒரு கெட்ட செய்தியைக் கேட்க நாடுகள் விரும்பாது. அதே நேரத்தில், ஏதேனும் ஒரு தருணத்தில் அல்லது இன்னொரு வேளையில் கொரோனா பரவல் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை தரும் செய்தியையும் கூற விரும்புகிறேன்," என்று டாக்டர் குளூக கூறினார்.

அத்துடன், தடுப்பூசி வந்துவிட்டால் கொரோனா தொற்றுக்கு முடிவுகட்டப்படும் எனச் சொல்லப்பட்டு வரும் நிலையில், அது உண்மையாக இராது என்றும் அவர் சொன்னார்.

"எல்லா மக்களுக்கும் தடுப்பூசி உதவுமா என்பதுகூட நமக்குத் தெரியாது. ஒரு குழுவிற்கு அது உதவலாம், இன்னொரு குழுவிற்கு அதனால் பயன் இராது என்பதற்கான சில அறிகுறிகள் தெரிகின்றன," என்றார் டாக்டர் குளூக.

ஐரோப்பாவிற்கான உலகச் சுகாதார அமைப்பில் மொத்தம் 55 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 51,000க்கும் மேற்பட்ட புதிய கிருமித் தொற்றுச் சம்பவங்கள் அந்நாடுகளில் பதிவாகின. குறிப்பாக, ஸ்பெயினிலும் பிரான்சிலும் அண்மைய வாரங்களாக கொரோனா மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கி உள்ளது.