சுற்றுப்புறம் தொடர்பான குற்றங்களைத் தடுக்க சிறப்புப் பணிக்குழு ஒன்றை மலேசியா அடுத்த மாதம் அமைக்க இருக்கிறது.
சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவோருக்கு எதிராக மலேசியா இந்த நடவடிக்கையை எடுப்பதாக அந்நாட்டின் சுற்றுப்புற நீர்வள அமைச்சர் துவான் இப்ராஹிம் துவான் மான் நேற்று தெரிவித்தார்.
இம்மாதத் தொடக்கத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் ஆறு ஒன்று மாசுபடுத்தப்பட்டதால் நான்கு தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டன. இதன் விளைவாக கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலத்தில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதனால் கோலாலம்பூரிலும் சிலாங்கூர் மாநிலத்திலும் மில்லியன்கணக்கான மக்கள் கோபம் அடைந்தனர்.
அதுமட்டுமல்லாது, வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பிரச்சினையை மலேசியா எதிர்நோக்குகிறது. குப்பை நிறைந்த பல கொள்கலன்கள் மலேசிய துறைமுகங்களில் கிடப்பதாகக் கூறப்படுகிறது.
சிறப்புப் பணிக்குழுவுடன் சுற்றுப்புறத் துறை, தண்ணீர் சேவை ஆணையம், உயிரியல் பாதுகாப்புத் துறை, போலிஸ் படை ஆகியவை இணைந்து செயல்படும் என்று அமைச்சர் துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.
"சுற்றுப்புறத்தை மாசுப்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் அதிகாரிகளுக்கு புதிய சிறப்புப் பணிக்குழு ஊக்குவிப்பாக அமையும்," என்றார் அமைச்சர் துவான் இப்ராஹிம்.