சுடச் சுடச் செய்திகள்

ஆசியாவில் பாகுபாடு காட்டுவது அதிகரிப்பு

செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை

கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்ப் பரவலால் ஆசியாவில் புலம்பெயர்ந்தோர், வெளிநாட்டவர்கள் உட்பட எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோர் மீது பாகுபாடு காட்டுவது அதிகரித்து வருகிறது என்று செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்து இருக்கிறது.

இதன் தொடர்பில் இந்தோனீசியா, மலேசியா, மியன்மார், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 5,000 பேரிடம் அந்த மனித நேய அமைப்பு கருத்தாய்வு நடத்தியது. அவர்களில் பாதிப் பேர், கொரோனா பரவலுக்கு குறிப்பிட்ட இனத்தவரே காரணம் என்று சாடியதாக அந்த ஆய்வு கூறியது.

“கொரோனா பரவலுக்கு உள்ளூரில் புலம்பெயர்ந்தவர்களும் வெளிநாட்டவர்களுமே காரணம் எனக் கைகாட்டுவது கவலை அளிப்பதாக உள்ளது,” என்றார் தலைமை ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் விவியன் ஃபிளக்.

வெளிநாட்டவர்களும் விதிமீறுவோருமே காரணம் என்று ஆய்வில் பங்கேற்ற இந்தோனீசியர்களில் பாதிக்கு மேற்பட்டோரும், சீனர்களும் மற்ற வெளிநாட்டவர்களுமே காரணமே என மியன்மார்நாட்டவர்களும் குற்றம் சாட்டினர்.

புலம்பெயர்ந்தவர்களும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டவர்களுமே கொரோனா பரவக் காரணம் என ஆய்வில் பங்கேற்ற மலேசியர்களில் மூன்றில் இரு பங்கினர் சாடினர்.

கடந்த மே மாதம், உரிய ஆவணங்களின்றி மலேசியாவில் தங்கி இருந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரையும் அகதிகளையும் அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்தனர்.

இத்தகைய நடவடிக்கை, சட்டவிரோதமாகத் தங்கி இருப்போரை, ஒருவேளை அவர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டாலும் சிகிச்சை பெறுவதைத் தடுத்து, மறைந்து வாழும்படி செய்துவிடும் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரித்து இருந்தது.

ஆனால், பயண, நடமாட்டக் கட்டுப்பாடுகளை மீறுவதிலிருந்து மக்களைத் தடுப்பதே அந்த நடவடிக்கையின் இலக்கு என மலேசிய போலிஸ் விளக்கமளித்தது.

ஈரானிய எல்லைப் பகுதியில் போதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தவறியதுடன், அந்நாட்டிற்கு ஆன்மிகப் பயணம் சென்றவர்கள் உட்பட வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களும் சீனாவில் இருந்து வந்தவர்களும் கொரோனா பரவக் காரணமாகி விட்டனர் என்ற ஆய்வில் பங்கேற்ற பாகிஸ்தானியர்களில் பெரும்பாலானோர் தெரிவித்தனர்.

இந்த நான்கு நாடுகளிலும், உயர்கல்வி கற்றவர்களும் கூட ‘கொரோனா பரவலுக்குக் குறிப்பிட்ட இனத்தவரே காரணம்’ எனச் சுட்டியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என செஞ்சிலுவைச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் சிலர் மட்டுமே கிருமிப் பரவலுக்கு குறிப்பிட்ட இனத்தவரைப் பொறுப்பாக்கவில்லை என ஆய்வாளர்கள் கூறினர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon