சுடச் சுடச் செய்திகள்

கொள்ளைநோயை பரப்பியதாக சீனா மீது டிரம்ப் பாய்ச்சல்

நியூயார்க்: ஐக்கிய நாட்டு சபை பொதுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று உரையாற்றிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மீண்டும் சீனாவை நேரடியாக சாடியுள்ளார். உலகம் முழுவதும் கொள்ளை நோயை சீனா பரப்பியதாக அவர் கூறினார். கொள்ளை நோய் பரவியதற்கு சீனாவே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சீனா, அதிபர் டிரம்ப் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு ஐநா கூட்டத்தை மோதலை ஏற்படுத்தும் தளமாகப் பயன்படுத்து கிறார் என்று கூறியது.

முன்னதாகக் கூட்டத்தில் பேசிய சீன அதிபர் ஸி ஜின்பிங், உலகம் முழுவதும் கொள்ளை நோய் பரவும் சூழலில் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு நிலவுவது அவசியம் என்று சொன்னார்.

“எந்தவொரு நாட்டுடனும் மோதலில் ஈடுபட சீனா விரும்பவில்லை,” என்றார் அவர்.

இதற்கிடையே ஐநாவுக்கான சீனத் தூதர் ஷாங் ஜுன், டிரம்பின் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரமில்லை என்று கூறினார்.

“ஆயிரம் முறை பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னாலும் பொய், பொய்தான்,” என்று அவர் சொன்னார்.

“உலக விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்த எந்த நாட்டுக்கும் உரிமையில்லை. யாராலும் மற்றொருவரின் விதியை நிர்ணயிக்க முடியாது. உலக நாடுகளுக்கெல்லாம் தான்தான் தலைவன் என்பது போல செயல்படக் கூடாது,” என்று திரு ஷாங் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் மொத்தம் 200,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுக் கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப், சுற்றுச் சூழலை சீனா சிறந்த முறையில் பாதுகாக்கவில்லை என்று கூறினார். இதற்கிடையே பொதுக் கூட்டத்தில் பேசிய மற்றொரு தலைவரான இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, இரு பெரிய நாடுகளுக்கு இடையே உறவு மேலும் மோசமடைந்தால் போருக்கு வழி வகுக்கும் என்றார்.

“உலகின் நிலைத்தன்மை பாதிக்கும், அமைதி குலையும், இதனால் ஒருவருக்கும் லாபமில்லை,” என்று அவர் எச்சரித்தார். தென் சீனக் கடல் விவகாரம், வர்த்தகப் போர் உட்பட அமெரிக்க-சீன உறவில் தொடர்ந்து பதற்றம் நிலவும் வேளையில் அதிபர் விடோடோவின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon