100,000 மலேசியர்கள் வேலை இழக்கக்கூடும்

ஜோகூர் பாரு: சிங்கப்பூருடனான மலேசிய எல்லையைக் கூடிய விரைவில் மீண்டும் திறக்க வேண்டும் என்று ஜோகூர் மாநில முதல்வர் ஹாஸ்னி முகம்மது கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா நெருக்கடிநிலை காரணமாக மலேசியா அதன்எல்லைகளை மூடியுள்ளது. இதன் காரணமாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த ஏறத்தாழ 100,000 மலேசியர்களால் வேலைக்குச் செல்ல முடியவில்லை.கடந்த மார்ச் மாதம் மலேசிய எல்லைகள் மூடப்பட்டதிலிருந்து அவர்கள் வேலையின்றித் தவித்து வருகின்றனர். ஜோகூர் மாநில அரசாங்கத்தால் அவர்களுக்கு வேலை தேடித் தர முடியவில்லை என்று திரு ஹாஸ்னி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அந்த மலேசியர்கள் பல மாதங்களாக வேலைக்குச் செல்லாததால் அவர்கள் தங்கள் வேலைகளை இழக்கக்கூடும் என்றார் அவர்.

ஏற்கெனவே ஜோகூர் மாநிலத்தில் இதற்கு முன்பு இல்லாத அளவில் வேலையின்மை விகிதம் 18 விழுக்காடாகப் பதிவாகியிருக்கிறது என்று திரு ஹாஸ்னி தெரிவித்தார். ஜோகூரில் கிட்டத்தட்ட 35,000 பேர் வேலையின்றி இருப்பதாக அவர் கூறினார்.

“மக்களின் உயிருக்குத் தரும் முக்கியத்துவத்தை அவர்களது வாழ்வாதாரத்துக்கும் கூட்டரசு அரசாங்கம் தர வேண்டும்,” என்றார் திரு ஹாஸ்னி.

பணப் புழக்கமில்லாததால் ஜோகூர் மாநிலத்தில் உள்ள நகரங்களில் 5 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடு வர்த்தகங்கள் முடங்கி மூடப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார். கொரோனா நெருக்கடிநிலைக்கு முன்பு ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 250,000 மலேசியர்கள் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே வேலை நிமித்தம் பயணம் செய்ததை அவர் சுட்டினார்.

2013ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு சிறந்த வர்த்தகநிலை கொண்ட மாநிலங்களில் ஜோகூரும் ஒன்று. ஆனால் தற்போது ஜோகூரின் வர்த்தகநிலை மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19ஆல் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அதே சமயத்தில் சிங்கப்பூருடனான மலேசிய எல்லையைத் திறப்பதற்கான வழிவகைகளைப் பரிசீலிக்க ஜோகூரின் முதல்வர் என்ற முறையில் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினுடன் அணுக்கமாகச் செயல்படுவதாக திரு ஹாஸ்னி கூறினார்.

ஜோகூரில் சில நாட்களாகவே யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட திரு ஹாஸ்னி, சிங்கப்பூருடனான மலேசிய எல்லையைத் திறப்பதற்கு இதுவே சரியான நேரம் என்றும் கூறினார். அவ்வாறு செய்வதன் மூலம் சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் மீண்டும் தங்கள் வேலையைத் தொடங்கலாம் என்று அவர் கூறினார்.

“முதலில் சிங்கப்பூரில் பயிலும் மலேசிய மாணவர்கள் சிங்கப்பூருக்குச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். அதன் பிறகு படிப்படியாக சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களுக்கு இந்த ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்,” என்று திரு ஹாஸ்னி தெரிவித்தார்.

சிங்கப்பூருடனான மலேசிய எல்லையை மீண்டும் திறப்பதற்கான நேரம் கனிந்துவிட்டதாக ஜோகூர் மாநிலத்தின் சுகாதார, சுற்றுப்புறக் குழுத் தலைவர் ஆர். வித்யானந்தன் தெரிவித்தார்.

மற்ற விவகாரங்கள் தொடர்பாக கடைப்பிடிக்கப்படும் கெடுபிடியான அணுகுமுறைகளை மலேசியா- சிங்கப்பூர் உறவில் பின்பற்றக்கூடாது என்று நாங்கள் கருதுகிறோம்.

“இதுகுறித்து கூட்டரசு அரசாங்கத்திடம் ஜோகூர் மாநில அரசாங்கம் அதன் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அவை உடனடியாகப் பரிசீலனை செய்யப்பட்டு பொருளியலை மீண்டும் உயிர்ப்பிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்றார் திரு வித்யானந்தன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!