பள்ளி செல்லும் பருவத்தில் இருக்கும் சுமார் 280,000 சிறுவர்கள், மார்ச் 1 முதல் செப்டம்பர் 19ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
குறிப்பிட்ட அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட நோய்த்தொற்றில் இது நான்கு விழுக்காடு எனவும் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையைப்போல இரண்டு மடங்கு எண்ணிக்கையில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்றும் அந்தத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
பள்ளிகளைத் திறப்பதற்கும் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று கல்வி பயில்வதற்கும் கொவிட்-19 தாக்கம் பற்றிப் புரிந்துகொள்வதற்காக நோக்கில் இந்தத் தரவுகள் வெளியாகின.
SARS-CoV-2 கிருமிப் பரவல் விகிதம் குறைவாக இருக்கும் குழுக்களிடையே கொவிட்-19 அபாயம் குறைவு என்பதையும் கறுப்பினத்தவர், லத்தீன் அமெரிக்க சமூகம் போன்ற சில எளிதில் பாதிக்கப்படக்கூடிய சிறுபான்மையினரிடையே கிருமித்தொற்று அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கிருமித்தொற்றுக்கு உள்ளான 277,285 பேரில் 3,240 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; 404 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 51 பேர் உயிரிழந்தனர்.