அபாண்டி அலி: பதவி நீக்கம் சட்டவிரோதமானது

அபாண்டி அலி: பதவி நீக்கம் சட்டவிரோதமானது

3 mins read
bd1364b6-31c3-451c-8eee-7123312d5a80
படம்: தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தலைமைச் சட்ட அதிகாரி பதவியிலிருந்து தம்மை இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீக்கியது சட்டவிரோதமானது என்று மலேசியாவின் முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரி அபாண்டி அலி தெரிவித்துள்ளார். இதையடுத்து, தமக்கு அந்தப் பதவியைத் திரும்பவும் கொடுக்க வேண்டும் எனக் கோரி மலேசியாவின் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தை அவர் தமது வழக்கறிஞர்கள் மூலம் அனுப்பினார். முன்னாள் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது சதித் திட்டம் தீட்டி தம்மைப் பதவி நீக்கம் செய்ததாக திரு அபாண்டி குற்றம் சாட்டினார்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான திரு அபாண்டி 2015ஆம் ஆண்டில் தலைமைச் சட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அதையடுத்து, 2018ஆம் ஆண்டில் திரு நஜிப் ரசாக் பிரதமராக இருந்தபோது திரு அபாண்டி மீண்டும் தலைமைச் சட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று 1எம்டிபி தொடர்பான வழக்கில் திரு நஜிப் குற்றவாளி அல்ல என்று திரு அபாண்டி தீர்ப்பளித்தார்.

2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதியன்று மலேசிய மாமன்னரின் சம்மதத்துடன் தாம் தலைமைச் சட்ட அதிகாரி பதவியை ஏற்றதாக திரு அபாண்டி நேற்று கூறினார்.

2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி வரை பதவிக் காலம் நீடிக்கும் என நிர்ணயிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்தப் பதவிக் காலம் முடிவடைந்ததும் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதியிலிருந்து தலைமைச் சட்ட அதிகாரியாகத் தொடர அரசாங்கம் தம்மை நியமனம் செய்ததாக திரு அபாண்டி கூறினார்.

அரசாங்கத்துக்கான தலைமைச் செயலாளர் மூலம் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதியன்று நியமனக் கடிதம் தமக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் பதவியை ஏற்பதாக 2018ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதியன்று அரசாங்கத்துக்குக் கடிதம் அனுப்பியதாகவும் திரு அபாண்டி தெரிவித்தார்.

இந்நிலையில், அதே ஆண்டு மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வெற்றி பெற்றது.

அதையடுத்து, மே மாதம் 10ஆம் தேதியன்று மலேசியப் பிரதமராக டாக்டர் மகாதீர் முகம்மது பதவியேற்றார்.

திரு அபாண்டியை விடுப்பில் செல்ல உத்தரவிட்டுள்ளதாக நான்கு நாட்கள் கழித்து டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தலைமைச் சட்ட அதிகாரியாக திரு டாமி தாமஸ் நியமிக்கப்பட்டார்.

அதே ஆண்டு ஜூன் மாதத்தில் தமது பதவி நீக்கத்துக்கு மாமன்னர் சம்மதம் தெரிவித்ததாக தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக திரு அபாண்டி தெரிவித்தார்.

ஆனால் அதற்கான ஆவணங்கள் ஏதும் தம்மிடம் தரப்படவில்லை என்றார் அவர்.

தமது பதவியைத் தவறான முறையில் பயன்படுத்தி டாக்டர் மகாதீர் தம்மைப் பதவி நீக்கம் செய்ததாக திரு அபாண்டி குற்றம் சாட்டினார்.

தமது பதவி நீக்கம் செல்லாது என்று தெரிவித்த திரு அபாண்டி, அதன் விளைவாக தமக்கு இழப்புகள் ஏற்பட்டதாகக் கூறினார்.

அரசாங்கத்துக்கு தாம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அந்தக் கடிதம் அனுப்பப்பட்ட தேதியிலிருந்து ஏழு நாட்களுக்குள் தம்மை மீண்டும் தலைமைச் சட்ட அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று திரு அபாண்டி கூறியுள்ளார்.

கோரப்படும் இழப்பீட்டுக்கான தொகையை அவர் வெளியிடவில்லை.

அவ்வாறு செய்யத் தவறினால் அரசாங்கத்துக்கு எதிராக தாம் வழக்கு தொடுக்கப்போவதாக அவர் கூறினார்.