அதிபர் டோனல்ட் டிரம்ப்: எனது உடல்நிலை நன்றாக இருக்கிறது என்று நினைக்கிறேன்

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அந்நாட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அதிபர் டிரம்ப்புக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்படுவதாகவும் அவருக்கு உயிர்வாயு சுவாசக் கருவித் தேவையில்லை என்றும் அவரது மருத்துவர் தெரிவித்தார்.

அதிபர் டிரம்ப்புக்குக் கிருமித்தொற்று உறுதியானதிலிருந்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பலருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அவரது தேர்தல் பிரசார நிர்வாகி பில் ஸ்டெஃபியன், முன்னாள் ஆலோசகர் கெலியேன் கோன்வே முதலியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமக்கு கிருமித்தொற்று ஏற்பட்ட செய்தி வெளியானதிலிருந்து தாம் குணமடைய வேண்டும் என வேண்டிக்கொண்டோருக்கு அதிபர் டிரம்ப் டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

“எனது உடல்நிலை நன்றாக இருக்கிறது என நினைக்கிறேன். எனக்காக அக்கறை கொண்டு ஆதரவு தெரிவித்துள்ள அனைவருக்கும் நன்றி,” என்று அவர் தெரிவித்தார். டுவிட்டர் மூலம் அவர் காணொளி ஒன்றையும் வெளியிட்டார். கிருமித்தொற்றிலிருந்து மீ்ண்டுவர தம்மால் ஆன அனைத்தையும் செய்யவிருப்பதாக அதில் அவர் தெரிவித்தார்.

அதிபர் டிரம்ப்புக்கு இலேசான பாதிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியது. வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ நிலையத்தில் அவருக்கென ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு அறையிலிருந்து தமது பணிகளை அதிபர் டிரம்ப் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அவரது உடல்நிலை மோசமடைந்திருப்பதாக மக்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.

பொதுவாக, அதிபர் டிரம்ப்புக்கு மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்வது பிடிக்காது என்றும் இம்முறை அவர் மருத்துவமனைக்குச் செல்ல இணங்கியிருப்பது கொரோனாவால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதை அவர் உணர்வதைக் காட்டுவதாகவும் அவருடன் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். அதிபர் டிரம்ப்பின் உடல்நிலை குறித்து தங்களுக்கு கூடுதல் விவரங்கள் கிடைக்கவில்லை என்றும் பொதுமக்களுக்கு தெரிவதுதான் தங்களுக்கும் தெரியும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் பலர் தெரிவித்துள்ளனர்.

அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் இருக்கும்போது துணை அதிபர் மைக் பென்சுக்கு அதிபரின் அதிகாரம் வழங்கப்படாது என வெள்ளை மாளிகை தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!