கொரோனா கிருமித்தொற்று நெருக்கடிநிலையைத் தாம் கையாண்ட விதம் குறித்து பிரிட்டிஷ் மக்கள் சினங்கொண்டிருப்பது தமக்குத் தெரியும் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மேலும் கிட்டத்தட்ட 16,000 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள விவரம் வெளியிடப்படவில்லை என்று பிரிட்டிஷ் அதிகாரி உறுதி செய்ததை அடுத்து திரு ஜான்சன் இவ்வாறு கூறினார்.
திரு ஜான்சனுக்கு எதிரான அதிருப்திக் குரல் அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் குளிர்காலம் பிரிட்டனுக்குச் சோதனைக்காலமாக இருக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“மக்கள் கோபமாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். அதிலும் என்மீது அவர்கள் சினங்கொண்டிருப்பது எனக்குத் தெரியும்,” என்று பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
“கிறிஸ்மஸ் வரை பல சவால்களை எதிர்நோக்க வேண்டிவரும். அதற்குப் பிறகும் அதே நிலை தொடரலாம். பொதுமக்கள் பயமின்றி வாழ வேண்டும். அதே வேளையில் பகுத்தறிவையும் பயன்
படுத்த வேண்டும்,” என்றார் திரு ஜான்சன்.
பிரிட்டனில் மேலும் பலருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டு வரும் வேளையில், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு திரு ஜான்சனுக்கு இருக்கிறது. அதுமட்டுமல்லாது, வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளியலை மீண்டும் உயிர்ப்பித்து பிரிட்டிஷ் மக்களுக்கு வேலைகளை உருவாக்கித் தரும் கடமையும் அவருக்கு இருக்கிறது.
திரு ஜான்சனை ஆதரிப்பதில் அவரது கன்சர்வேட்டிவ் கட்சி பிளவுபட்டுள்ளது. தமது கட்சியினரின் முழு ஆதரவையும் பெற்று தமது அதிகாரத்தை வலுப்படுத்த அவர் முற்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 25ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 2ஆம் தேதி வரை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மேலும் 15,841 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட தகவல் பதிவு செய்யப்படவில்லை.
இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் தொடர்பான அன்றாடப் பதிவு, முன் இல்லாத அளவுக்கு நேற்று முன்தினம் 22,961ஆகப் பதிவானது.
இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை எதிர்நோக்கிய தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டதாக பிரிட்டிஷ் சுகாதாரத் துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.