இந்தோனீசியாவின் புதிய தொழிலாளர் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க தண்ணீரைக் குழாய்களில் பீய்ச்சி அடித்ததுடன், கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் போலிசார் பயன்படுத்தினர். இந்தோனீசியா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்களை போலிசார் கைது செய்தனர்.
ராய்ட்டர்ஸ் செய்திகளின்படி, நேற்று சுமார் 400 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தப் புதிய சட்டம், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் வேலைகளை உருவாக்கவும் தேவையான ஒன்று என்று கூறப்பட்டது.
இந்தப் புதிய சட்டத்தின்கீழ், நிறுவனங்கள் ஊழியர்களை எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் ஒப்பந்த அடிப்படையில் வைத்துக்கொள்ளலாம். ஆனால், அரசாங்க ஆதரவுடன் வேலை பாதுகாப்புக் காப்புறுதியை புதிய சட்டம் வழங்கும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறைபாடு, ஊழியர்களின் உரிமைகளில் பலவீனம் போன்ற காரணங்களால் மக்கள் இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

