மலேசியாவில் புதிய சிறைக் கைதிகளுக்கும் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்று அந்நாட்டு மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அத்தகையோர் 15 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவர் என்றும் அவர் சொன்னார்.
தனிமைப்படுத்தும் காலத்தின் முடிவில் சிறைக் கைதிகளுக்குத் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் ஐந்து நாட்களுக்கு அவர்கள் தனிமையில் வைக்கப்படுவர் என்று திரு இஸ்மாயில் கூறினார்.
"சிறைச்சாலைகளில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் செயல்பாட்டு நடைமுறைகளில் இவை அடங்கும்," என்று ஃபேஸ்புக் நேரலையில் அவர் நேற்று தெரிவித்தார்.
மலேசியாவில் அண்மையில் பதிவான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் சிறைச்சாலைகளிலும் தடுப்புக்காவல் மையங்களிலும் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக திரு இஸ்மாயில் கூறினார்.
"என்றாலும், நாட்டில் கிருமித்தொற்று திடீரென உயர்ந்திருப்பது மலேசியர்களைப் பீதியடையச் செய்துள்ளது," என்றார் அவர்.
சிறைக்கைதிகளைச் சந்திக்க அவர்களது குடும்பத்தினர் சிறைச்சாலைக்குச் செல்ல அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். சிறைச்சாலை வளாகங்கள் தினமும் இருமுறை சுத்தப்படுத்தப்படும். சிறைக் கைதிகளுக்கு இடையே தனிநபர் இடைவெளி உறுதி செய்யப்படும் என்று திரு இஸ்மாயில் சொன்னார்.
சிறைச்சாலைகளில் நெரிசலைத் தவிர்க்க தற்காலிக சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொவிட்-19 தொற்றியோரைக் கண்காணித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒவ்வொரு சிறைச்சாலையிலும் மருத்துவக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
375 பேருக்கு நோய்த்தொற்று
இதற்கிடையே, மலேசியாவில் மேலும் 375 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அவற்றில் 371 உள்ளூர் நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அடங்கும். எஞ்சிய நால்வர் வெளிநாடுகளில் இருந்து மலேசியா வந்தவர்கள்.
புதிதாக அறிவிக்கப்பட்ட நோய்த்தொற்றுச் சம்பவங்களில் 271 சம்பவங்கள் சாபா மாநிலத்தில் பதிவானதாக மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று தெரிவித்தார். சிலாங்கூரில் 36 சம்பவங்களும் கெடாவில் 16 சம்பவங்களும் பதிவாகின.
மலேசியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை புதிய உச்சமாக 691 சம்பவங்கள் பதிவான நிலையில், நேற்று இரண்டாவது நாளாக தொற்று குறைவாக பதிவானது.

