இந்தோனீசிய நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய தொழிலாளர் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று மூன்றாவது நாளாக தலைநகர் ஜகார்த்தாவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
நேற்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களைக் கலைக்க தண்ணீரைக் குழாய்களில் பீய்ச்சி அடித்ததுடன், கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் போலிசார் வீசினர்.
கடந்த இரு நாட்களில் மட்டும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சுமார் 400 பேர் போலிசாரால் தடுத்து வைக்கப்பட்டனர். ஜகார்த்தா உட்பட இந்தோனீசியா முழுவதும் கிட்டத்தட்ட 12 நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்தப் புதிய சட்டம் மீட்டுக்கொள்ளப்படும் வரை ஆர்ப்பாட்டகாரர்கள் பின்வாகுவதாகத் தெரிவியவில்லை.
'அதிபர் விடோடோ ஓடிவிட்டார்'
இந்நிலையில், அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோ பணிநிமித்தமாக மத்திய கலிமந்தான் மாநிலத்திற்கு நேற்று சென்றார். ஜகார்த்தாவில் ஆர்ப்பாட்டங்கள் இன்னமும் ஓயாத வேளையில், அவற்றைத் தவிர்ப்பதற்காக "ஜோக்கோவி ஓடிவிட்டார்" என்று குறிப்பிடும் 'ஹேஷ்டேக்' டுவிட்டரில் வலம் வந்தது.
இணையவாசிகளின் இந்தப் பதிவுகள் குறித்து கருத்துரைத்த அதிபரின் செயலாளர் பே மச்முதீன், அதிபர் விடோடோவின் மத்திய கலிமந்தான் பயணம் முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறினார்.
"அதிபரின் பயணத்திற்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் சம்பந்தமில்லை," என்று செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறினார்.
மத்திய கலிமந்தானில் உள்ள உணவுத் தொழிற்சாலை ஒன்றுக்குச் சென்ற திரு விடோடோ, அங்கு அரிசி விளைச்சல், மீன் கூண்டுகள், வாத்துப் பண்ணைகள் ஆகியவற்றைப் பார்வையிட்டதாக திரு பே விவரித்தார்.
"நாட்டின் உணவுப் பாதுகாப்பு குறித்து அதிபர் பெரிதும் அக்கறை கொண்டுள்ளார். காரணம், கொவிட்-19 சூழலால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் உணவு, வேளாண் அமைப்பு எச்சரித்துள்ளது.
"எனவேதான், மத்திய கலிமந்தானில் உணவுத் தொழிற்சாலையின் நடைமுறைகளை நேரடியாகக் கவனிக்க அதிபர் விரும்பினார்," என்று திரு பே விளக்கமளித்தார்.
மத்திய கலிமந்தானில் திரு விடோடோ உணவுப் பாதுகாப்பு விவகாரம் குறித்து மட்டும் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜகார்த்தாவில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து அவர் பேசவில்லை.
கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தப் புதிய தொழிலாளர் சட்டம், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் வேலைகளை உருவாக்கவும் தேவையான ஒன்று என்று கூறப்பட்டது.
இந்தப் புதிய சட்டத்தின்கீழ், நிறுவனங்கள் ஊழியர்களை எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் ஒப்பந்த அடிப்படையில் வைத்துக்கொள்ளலாம். ஆனால், அரசாங்க ஆதரவுடன் வேலை பாதுகாப்புக் காப்புறுதியை இந்தச் சட்டம் வழங்கும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறைபாடு, ஊழியர்களின் உரிமைகளில் பலவீனம் போன்ற காரணங்களால் மக்கள் இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

