அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அதிபர் தேர்தல் பிரசாரத்தை அவர் தொடர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனநாயக வேட்பாளர் ஜோ பைடனுக்கு எதிராக அடுத்த வாரம் நடைபெற இருந்த தேர்தல் விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிபர் டிரம்ப்புக்கு கிருமித்தொற்று ஏற்பட்டதால் இரண்டாவது தேர்தல் விவாதத்தைக் காணொளி வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அதிபர் டிரம்ப் மறுப்பு தெரிவித்ததால் அது ரத்து செய்யப்பட்டுள்ளது. கடைசி தேர்தல் விவாதம் இம்மாதம் 22ஆம் தேதியன்று நடத்தப்பட இருக்கிறது.
வெள்ளை மாளிகையின் மேல் மாடத்திலிருந்து அதிபர் டிரம்ப் தமது ஆதரவாளர்களிடம் பேசுவார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் நூற்றுக்
கணக்கானோர் கலந்துகொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது. அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதையடுத்து, மத்திய ஃபுளோரிடாவுக்கு அதிபர் டிரம்ப் நாளை பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க அதிபர் டிரம்ப் இலக்கு கொண்டுள்ளார். அவர் வெற்றி பெற வேண்டும் என்றால் ஃபுளோரிடா மக்களின் ஆதரவு பெறுவது மிகவும் முக்கியம் என்று கூறப்படுகிறது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, சேன்ஃபர்ட் நகரில் உள்ள விமான நிலையத்தில் அதிபர் டிரம்ப் தமது முதல் பிரசாரக்கூட்டத்தை நடத்த இருக்கிறார்.
பிரசாரக்கூட்டம் உள்ளரங்கில் நடத்தப்படுமா அல்லது வெளிப்
புறத்தில் நடத்தப்படுமா என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
ஃபுளோரிடா பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொள்வோரின் உடல்வெப்பநிலை சோதிக்கப்படும். அவர்களுக்கு முகக்கவசங்களும் கிருமி நாசினி திரவமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதிபர் டிரம்ப்புக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக இம்மாதம் 2ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ராணுவ மருத்துவமனையில் அவர் மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார். அவரிடமிருந்து கிருமி பரவும் அபாயம் இன்னும் உள்ளதா என்பது குறித்து தகவல் வெளி
யிடப்படவில்லை.
தேர்தல் பிரசாரத்தைத் தொடர அதிபர் டிரம்ப் எடுத்துள்ள முடிவுக்கு திரு பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தற்போது எந்த ஒரு மருந்தையும் தாம் எடுக்கவில்லை என்று தொலைக்காட்சி பேட்டியில் அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை தமக்கு மீண்டும் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தமக்கு சுவாசப் பிரச்சினை இல்லை என்று தெரிவித்த அதிபர் டிரம்ப், கிருமித்தொற்று ஏற்பட்டதால் வழக்கமான சுறுசுறுப்பை இழந்திருப்பதாகக் கூறினார். கொரோனா கிருமி யாரிடமிருந்து தமக்குப் பரவியது என்பது தமக்குத் தெரியவில்லை என்றார் அவர்.

