பெட்டாலிங் ஜெயா: மலேசியப் பிரதமர் முகைதீனுக்கு பெர்சாத்து, பாஸ் கட்சிகள் தங்களுடைய ஆதரவை மறு உறுதிப்படுத்தியுள்ளன.
புதிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் நாளை மாமன்னரை சந்திக்கவிருக்கிறார். ஆட்சி அமைக்க தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாகவும் அவர் கூறிவருகிறார்.
இந்த நிலையில் பெர்சத்துக் கட்சியும் பாஸ் கட்சியும் திரு முகைதீனுக்கு ஆதரவாக இருப்போம் என்று உறுதி தெரிவித்துள்ளன. "பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக அன்வார் கூறுவதற்கு ஆதாரம் இல்லை," என்று பெர்சத்துக் கட்சியின் தலைமைச்செயலாளர் ஹம்ஸா சைனூடின் கூறினார்.
பெர்சத்துக் கட்சியின் 31 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் முகைதீனையே ஆதரிப் பதாகவும் அவர் சொன்னார். பாஸ் கட்சியும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தனது 18 உறுப்பினர்களும் தேசிய கூட்டணி அரசாங்கத்துக்கு தலைமை வகிக்கும் பிரதமர் முகைதீனுக்கு முழு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தது.
திரு அன்வார் தலைமையில் நாடாளுமன்றத்தில் 91 உறுப்பினர்களைக் கொண்ட பக்கக்தான் ஹரப்பான் கூட்டணி செயல்படுகிறது. அரசாங்கத்தை அமைக்க குறைந்தது 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த நிலையில் ஆளும் கட்சியிலிருந்து சிலர் விலகி தனக்கு ஆதரவு அளிக்கலாம் என அன்வார் எதிர்பார்க்கிறார்.

