மலேசியா: சில மாநிலங்களில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு

மலேசியா: சில மாநிலங்களில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு

2 mins read
df6bcc4b-be27-4ccb-9287-e0f75236f2fb
-

மலேசியாவில் கொவிட்-19 கிருமிப் பரவலின் புதிய அலையைத் தொடர்ந்து கோலாலம்பூர், புத்ராஜெயாவிலும் சிலாங்கூர் மாநிலத்திலும் அக்டோபர் 14 முதல் அக்டோபர் 27 வரை நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது.

"இந்த தொற்றுநோய் தொடர்ந்து பரவாமல் தடுக்க, இன்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்பு அமர்வு சிலாங்கூர், கோலாலம்பூர் புத்ராஜெயாவில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்த ஒப்புக் கொண்டது," என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் கூறினார்.

கிலாங் வேலி என்று மலேசியர்களால் அழைக்கப்படும் இந்த மூன்று பகுதிகளும் மலேசியாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட இடங்களாகும். இங்கு மொத்தம் கிட்டத்தட்ட ஏழு மில்லியன் பேர் வசிக்கிறார்கள்.

அக்டோபர் 14ஆம் தேதி கட்டுப்பாடுகள் நடப்புக்கு வரும் என்றார் அமைச்சர். அண்மைய கட்டுப்பாடுகளின் படி பெரும்பாலான வர்த்தகங்கள், அவை கிருமித் தொற்றுத் தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றும் பட்சத்தில் தொடர்ந்து இயங்கலாம்.

ஆனால், பள்ளிகள், வழிபாட்டு இடங்கள், பாலர் பள்ளிகள் அனைத்தும் மூடப்படும். விளையாட்டு நடவடிக்கைகள் தடைசெய்யப்படும்.

கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் ஆகிய இடங்களில் இருந்து வெளியேறவோ, உள்ளே செல்லவோ அனுமதி இல்லை. வாகனப் போக்குவரத்தைத் தடுக்க சாலைத் தடைகள் வைக்கப்படும்.மலேசியாவில் நேற்று 561 புதிய கிருமித் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இருவர் உயிரிழந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 157 ஆக உயர்ந்தது.

சபாவில் 488 தொற்றுகள் பதிவாகியுள்ளன. நான்கு மாதங்களுக்கு முன்னர், கொரோனா கிருமி பரவல் குறையத் தொடங்கியதும் மலேசியா நடமாட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை விதித்தது. அது ஜூன் 10ஆம் தேதி முடிவுக்கு வந்தது.