மலேசியாவின் கூட்டரசுப் பிரதேசங்களான கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகியவற்றுடன் சிலாங்கூர் மாநிலத்திலும் நாளை தொடங்கி இரு வாரங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்படவுள்ளது.
அப்பகுதிகளில் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலேசியர்களால் 'கிள்ளான் பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படும் இந்த மூன்று பகுதிகளின் மக்கள்தொகை ஏறத்தாழ ஏழு மில்லியன்.
இந்த நடவடிக்கை குறித்து நேற்று அறிவித்த மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், "நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்க தேசிய பாதுகாப்பு மன்றம் இணக்கம் கண்டுள்ளது.
"அக்டோபர் 14ஆம் தேதி நள்ளிரவு முதல் அக்டோபர் 27ஆம் தேதி வரை ஆணை நடப்பில் இருக்கும்," என்று சொன்னார்.
நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை என்று அழைக்கப்படும் பகுதி முடக்கநிலை நான்கு மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. ஜூன் 10ஆம் தேதி அது முடிவுக்கு வந்தது.
அதையடுத்து, மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மலேசியா அறிவித்து இருந்தது. அதன்படி, பெரும்பாலான வர்த்தகங்களும் சமூக நடவடிக்கைகளும் மீண்டும் தொடரலாம். சாபா மாநிலத்தைத் தவிர்த்து இன்று வரை அந்த ஆணை நடப்பில் உள்ளது.
பகுதி முடக்கநிலை நடப்பில் உள்ள பகுதிகளில் பெரும்பாலான தொழில்துறைகள் தொடர்ந்து இயங்கலாம். சமூக இடைவெளி போன்ற சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவை பின்பற்ற வேண்டும்.
ஆனால், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் ஆகியவை மூடப்படும். விளையாட்டு நடவடிக்கைளுக்குத் தடை விதிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும், அங்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் சாலைத் தடுப்புகளை அமைக்க உள்ளனர்.


