இந்நிலையில், கொவிட்-19 சூழலைச் சமாளிக்க பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பில் கூடுதலாக 1,899 சுகாதார ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்குமாறு பொதுச் சேவை ஆணையம் மற்றும் மலேசிய நிதி அமைச்சிடம் அந்நாட்டுச் சுகாதார அமைச்சு கோரியுள்ளது.
சாபா, கெடா, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் அண்மையில் நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து கூடுதலான மருத்துவப் பணியாளர்களுக்கான தேவை ஏற்பட்டிருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.
ஆய்வு அதிகாரிகள், தாதியர்கள், ஆய்வுக்கூடத் தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்றோர் அந்த மருத்துவப் பணியாளர்களில் அடங்குவர் என்று டாக்டர் ஆதம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான கோரிக்கை இம்மாதம் 9ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், ஒப்பந்த அடிப்படையில் மருத்துவப் பணியாளர்களை அதிகரிக்க மலேசிய அரசாங்கம் ஒப்புதல் அளித்து இருப்பதைச் சுட்டினார். மருத்துவமனைகள், மருந்தகங்கள் ஆகியவற்றுடன் நாடு முழுவதும் உள்ள தனிமைப்படுத்டும் மையங்களில் சுகாதாரப் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவர் என்று டாக்டர் ஆதம் தெரிவித்தார்.
இதற்கிடையே, சாபாவில் கொவிட்-19க்கு எதிராக முன்களப் பணியாளர்களின் போராட்டம் மிகவும் முக்கியமான கட்டத்தில் இருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். கடந்த இரு வாரங்களாக சாபா மாநிலம் நோய்த்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
மலேசியாவில் கொவிட்-19 நோய் பரவத் தொடங்கியதிலிருந்து 579 சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மலேசியா கடந்த சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இம்மாதத்தின் முதல் 10 நாட்களில் சாபாவில் 85 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

