கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் ஒருவருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தடுப்பு மருந்து சோதனையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு ஏற்பட்டுள்ள, குறிப்பிடப்படாத உடல்நலப் பாதிப்பு குறித்து அந்நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. விசாரணை முடிந்தவுடன் அதுகுறித்த கூடுதலான தகவல்கள் பகிரப்படும் என அந்நிறுவனம் கூறியது.
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான உலகளாவிய போட்டி நிலவிவரும் வேளையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தடுப்பு மருந்து சோதனையைத் தற்காலிகமாக நிறுத்தி இருப்பது தடுப்பு மருந்தின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.
மேலும், மக்களிடம் நோய் தடுப்பு மருந்தை விநியோகிப்பது குறித்து நாட்டுத் தலைவர்கள் பேசி வந்துள்ள நிலையில், தடுப்பு மருந்து சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது அது எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெரு முதல் தென்னாப்பிரிக்கா வரை ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பு மருந்து சோதனையில் கிட்டத்தட்ட 60,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

