பேச்சுவார்த்தைக்கு அம்னோ ஆயத்தம்

பேச்சுவார்த்தைக்கு அம்னோ ஆயத்தம்

2 mins read
7d2a535b-6d91-4247-a74a-42158ce41bae
படம்: ராய்ட்டர்ஸ் / லிம் ஹுயே தெங் -

கோலாலம்பூர்: இவ்வாரத் தொடக்கத்தில் இடம்பெறும் முக்கிய சந்திப்புகள் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் தமது பதவியில் நீடிப்பாரா என்பதைத் தீர்மானிப்பதாக அமையலாம்.

பிரதமர் முகைதீன் தலைமையிலான 'பெரிக்கத்தான் நேஷனல்' கூட்டணி அரசுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்பதா இல்லையா என அம்னோ முடிவு செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்னோ, பெர்சத்து, 'பாஸ்' கட்சிகள் இன்று கூடி, தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைக் களையும் முயற்சியில் ஈடுபடவுள்ளன. அப்போது அமைச்சரவையை மாற்றத்திற்கு அம்னோ வலியுறுத்தும் எனத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, அம்னோ கட்சியின் உச்ச மன்றக் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

இன்னும் இரு வாரங்களில் அடுத்த ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால், அதுவரை பெரிக்கத்தான் கூட்டணி அரசாங்கம் தாக்குப்பிடிக்குமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

மொத்தம் 222 எம்.பி.க்களைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்தில் பெரிக்கத்தான் கூட்டணிக்கு 113 பேரின் ஆதரவு இருக்கிறது. அவர்களில் அம்னோ எம்.பி.க்கள் 39 பேர்.

பிரதமர் முகைதீனின் பெர்சத்து கட்சிக்கும் அம்னோவிற்கும் இடையே உரசல் அதிகமாகி வரும் நிலையில், 'பாஸ்' கட்சி சமாதான முயற்சியில் இறங்கும் எனத் தெரிகிறது.

முன்னதாக, கடந்த வாரம் மாமன்னரைச் சந்தித்தபோது தமக்கு 120 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி, அதற்கான ஆவணங்களையும் அளித்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்.

இதையடுத்து, திரு முகைதீன் தலைமையிலான அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்கப் புதிய நிபந்தனைகளை விதிப்பது என அம்னோ தலைமைத்துவம் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அம்னோ தலைவர் ஸாஹிட் ஹமிடி, தலைமைச் செயலாளர் அகமது மஸ்லான் உள்ளிட்டோருக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்று எனச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, கட்சியிலும் தமது செல்வாக்கை வலுப்படுத்த திரு ஸாஹிட் முயன்று வருகிறார். நீண்டகாலமாக எம்.பி.யாக இருக்கும் அம்னோ ஆலோசனை மன்றத்தின் தலைவர் ரஸாலி ஹம்ஸா, கட்சித் தலைவர் பதவிக்குக் குறிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர்களைத் தனித்தனியாகச் சந்தித்த திரு ஸாஹிட், தலைவராக நீடிக்க தமக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டதாக கட்சி வட்டாரங்களைச் சுட்டி 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.