நியூயார்க்: அமெரிக்காவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 84,000க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கணக்கெடுப்பு காட்டுகிறது. இதற்கு முன்னதாக ஜூலை 16ஆம் தேதிதான் ஆக அதிகமாக 77,299 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் 16 மாநிலங்களில் புதிய உச்சமாக தொற்று பதிவாகியது. நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் அதிக போட்டி எதிர்பார்க்கப்படும் ஒஹாயோ, மிஷிகன், வடகரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் மீண்டும் கொரோனா கிருமிப் பரவல் வேகம் அடைந்திருப்பதற்கான குறிப்பிட்ட ஒரு காரணத்தைச் சுகாதார நிபுணர்கள் கூறவில்லை. எனினும், நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கர்கள் சலிப்பு அடைந்திருப்பதும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குத் திரும்பியதும் தொற்று அதிகரிக்க காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்றால் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் அரை மில்லியன் பேர் உயிரிழந்துவிடக்கூடும் என்று வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது அந்நாட்டில் பதிவாகியுள்ள உயிரிழப்பு எண்ணிக்கையைவிட அது இருமடங்கிற்கும் அதிகமாகும்.
அமெரிக்காவில் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் ஏறத்தாழ 130,000 பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று அந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

