ஆசியாவில் பதிவாகியுள்ள கொவிட்-19 நோய்த்தொற்றுச் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை நேற்று 10 மில்லியனைக் கடந்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கணக்கெடுப்பு காட்டுகிறது.
நோய்த்தொற்று எண்ணிக்கையில் லத்தீன் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் ஆசியா உள்ளது. உலகின் 42.1 மில்லியன் நோய்த்தொற்றுச் சம்பவங்களில் கால்வாசி ஆசியாவில்தான் பதிவாகியுள்ளன.
ஆசியாவில் நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 163,000க்கும் அதிகம். உலகளவில் தொற்றால் உயிரிழந்தவர்களில் அது 14 விழுக்காடு.
உலக நாடுகள் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள தொற்று, மரண எண்ணிக்கையின்படி ராய்ட்டர்ஸ் நிறுவனம் கணக்கெடுப்பு செய்கிறது. என்றாலும் தொற்று, மரணங்களின் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பல நாடுகளில் நோய்த்தொற்றுப் பரிசோதனையில் பற்றாக்குறை நிலவுவதும் அன்றாட தொற்று எண்ணிக்கையை அவை குறைத்துக் காட்டுவதும் இதற்குக் காரணங்கள்.
ஆசியாவில் அதிக எண்ணிக்கையில் நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவானாலும் இந்த வட்டாரத்தில் அண்மைய வாரங்களாக தொற்றைக் கையாளுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் பதிவாகும் அன்றாட தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. மாறாக, ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவிலும் நோய்ப் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.

