விமான நிலையத்தில் பெண் பயணிகளிடம் வரம்பு மீறி பரிசோதனை செய்தவர்கள் மீது கத்தார் அரசாங்கம் நடவடிக்கை

2 mins read
7fd19666-1eab-4be6-a31b-5ba40d4b964f
படம்: ஏஎஃப்பி -

கத்தார் நாட்டின் தோஹாவில் உள்ள ஹமட் அனைத்துலக விமான நிலைய கழிவறையில் இம்மாதம் (அக்டோபர் 2020) 2ஆம் தேதி புதிதாகப் பிறந்த பச்சிளங் குழந்தையை விட்டுச் சென்ற தாயைக் கண்டுபிடிக்கும் நோக்கில் 10 கத்தார் ஏர்வேய்ஸ் விமானச் சேவைகளின் பெண் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.

அந்தப் பரிசோதனைகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

புதிதாகப் பிரசவித்த பெண் பயணி இருக்கிறாரா என்பதைக் கண்டுபிடிக்க பயணிகளிடம் வரம்பு மீறி பரிசோதனைகள் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டு, அத்தகைய பரிசோதனைகள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமீறிய, சட்டவிரோத நடவடிக்கைகளுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்களது விவரங்கள் அரசுத் தரப்பு அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இந்த பரிசோதனை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பெண் பயணிகளிடம் பிரதமரும் வெளியுறவு அமைச்சரும் மன்னிப்புக் கோரினர்.

ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் கத்தாருக்கு அரசதந்திர அழுத்தங்களை இந்த பரிசோதனை நடைமுறை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சமூக ஊடகங்களிலும் இந்தச் சம்பவத்தின் தொடர்பில் கண்டனங்கள் வலுத்தன.

பரிசோதனையால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பயணிகள் சம்பவம் குறித்துப் பேசியதையடுத்து, இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

ஆஸ்திரேலிய பெண்கள் 13 பேர், பிரிட்டனைச் சேர்ந்த 2 பெண்கள், பிரான்சை சேர்ந்த ஒரு பெண் ஆகியோர் பரிசோதனைகளுக்கு உட்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஹமட் அனைத்துலக விமான நிலையத்தின் கழிவறை குப்பைத்தொட்டிக்குள் அந்தப் பெண் சிசு பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு போடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பிரசவித்த பெண் யார் என்பதைக் கண்டுபிடிக்க அந்த விமான நிலையத்தில் இருந்த பெண் பயணிகள் விமானங்களிலிருந்து இறக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும், அத்தகைய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மில்லியன் கணக்கான பயணிகளைக் கையாண்டு வரும் அந்த விமான நிலையத்தில், இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்