இஸ்மிர்: துருக்கியிலும் பக்கத்தில் உள்ள கிரீஸ் நாட்டிலும் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. துருக்கியில் இஸ்மிர் என்ற மேற்குப் புற நகரில் பல கட்டடங்கள் இடிந்துவிட்டன.
அந்த இடிபாடுகளில் சிக்கி இருப்போரைக் காப்பாற்ற இடைவிடாமல் மும்முரமான முயற்சிகள் நடப்பதாக அதிகாரிகள் கூறினர்.
துருக்கியிலும் கிரீஸ் நாட்டிலும் நேற்றுக் காலை நிலவரப்படி 26 பேர் மாண்டுவிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 196 முறை நிலம் அதிர்ந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். காயமடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டு துருக்கியில் இஸ்மிர் நகருக்குள் கடல்நீர் புகுந்து வெள்ளம் ஏற்பட்டது.
அந்த வெள்ளத்தில் சக்கர நாற்காலி மாது ஒருவர் அடித்துச் செல்லப்பட்டு மாண்டுவிட்டார்.
நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவுக்கு இருந்ததாக அமெரிக்க ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்தன.
துருக்கி கடற்கரை அருகே இருக்கும் சாமோஸ் என்ற தீவை மையமாகக் கொண்டு வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரியவந்தது.
துருக்கியின் இஸ்மிர் நகரில் குறைந்தபட்சம் 13 கட்டடங்கள் இடிந்து கிடக்கின்றன. மேலும் பல கட்டடங்கள் சேதம் அடைந்துள்ள தாகவும் அதிகாரிகள் கூறினர்.
சுமார் 3 மில்லியன் மக்கள் வசிக்கும் துருக்கியின் மூன்றாவது ஆக அதிக மக்கள்தொகை உள்ள அந்த நகரில், 1,200க்கும் அதிகமான மீட்புப் பணியினர் படாதபாடுபட்டு வருகிறார்கள். பல மணி நேரங்களுக்குப் பிறகு சிலர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
துருக்கியில் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இஸ்மிர் நகரில் இருந்து சுமார் 200 மைல் வடகிழக்கே இருக்கும் இஸ்தான்புல் நகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இரு நாடுகளிலும் பயங்கர பேரிடர் நிகழ்ந்ததை அடுத்து கிரேக்க பிரதமரும் துருக்கி அதிபரும் பரஸ்பரம் அனுதாபமும் ஆதரவும் தெரிவித்துக்கொண்டனர்.

