ஜெனிவா: கொவிட்-19 கிருமி எந்த விலங்கிடம் இருந்து தோன்றியது என்பது பற்றி புலன்விசாரணை நடத்தும் நோக்கத்தில் அனைத்துலக வல்லுநர்கள் சீன வல்லுநர்களுடன் முதலாவது கூட்டத்தை மெய்நிகர் ரீதியில் நடத்தியதாக உலக சுகாதார நிறுவனம் நேற்று அறிவித்தது.
கொரோனா கிருமி எந்த விலங்கிலிருந்து தோன்றியது என்பதையும் அது மனிதர்களுக்கு எப்படி பரவியது என்பதையும் கண்டுபிடிக்க சீனாவுக்கு உதவும் வகையில் அனைத்துலக வல்லுநர்கள் குழு ஒன்றை சீனாவுக்கு அனுப்ப உலக சுகாதார நிறுவனம் பல மாத காலமாக பாடுபட்டு வருகிறது.
கிருமி மேற்கொண்டும் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தில் அதன் தோற்றுவாய் எது என்பதைக் கண்டறிய உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து முயலும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் நேற்று தெரிவித்தார்.
சீன வல்லுநர்களுடன் அனைத்துலக வல்லுநர்கள் இணையம் வழி பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 கிருமி பற்றி புலன்விசாரணை நடத்துவதற்கான தொடக்க காரியங்களைச் செய்வதற்காக ஜூலை மாதம் ஐநா அமைப்பு பெய்ஜிங்கிற்கு ஒரு குழுவை அனுப்பியது.
இருந்தாலும் புலன்விசாரணைக் குழு சீனாவுக்கு எப்போது செல்லும் என்பது இன்னமும் சரிவர தெரியவில்லை. இந்நிலையில் முதல் கூட்டம் நடந்துள்ளது.

