ஜோகூர்பாரு: மலேசியாவில் திரை அரங்குகளை நடத்துவோர் நாடு முழுவதும் அரங்குகளை தற்காலிகமாக முடிவிட முடிவு செய்து இருக்கிறார்கள்.
அதனை அடுத்து திரையரங்குகள் நவம்பரில் படிப்படியாக மூடப்படும் என்றும் கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ், டிஜிவி சினிமாஸ் அரங்குகள் நாளை முதல் தற்காலிகமாக மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காரணமாகவும் புதிய படங்கள் வெளிவராத நிலை இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக மலேசிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
கொவிட்-19 காரணமாக மலேசியாவின் திரைப்பட தொழில்துறை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 90% இழப்பை சந்தித்து உள்ளது. இந்தத் துறைக்கு நாள் ஒன்றுக்கு 1.3 மில்லியன் ரிங்கிட் (S$428,000) இழப்பு ஏற்படுவதாக கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கோ மெய் லீ கூறினார். இதைக் கணக்கிட்டுப் பார்க்கையில் இந்த ஆண்டில் மொத்த இழப்பு 475 மில்லியன் ரிங்கிட்டாக உள்ளது.
சென்ற ஆண்டில் இந்தத் துறை 102 மில்லியன் ரிங்கிட் லாபம் அடைந்தது என்றார் அவர்.
டிவிஜி சினிமாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான மோகித் பார்கவா, திரையரங்குகள் மூன்று மாத காலம் மூடியே கிடந்தன. ஜூலை 1 ஆம் தேதி அவை திறக்கப்பட்டன. மூடிக் கிடந்த காலத்தில் பெருமளவு இழப்பு ஏற்பட்டுவிட்டது என்று விளக்கினார்.
இந்தத் தொழில்துறை மீண்டு வருவதற்கான அறிகுறிகள் கொஞ்சம் தெரியவந்த நிலையில் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவுக்கு கீழ்ப்படிந்து நடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளதால் பாதிப்பு மேலும் அதி கரிக்கும் என்று இவர் தெரிவித்தார்.

