டிரம்ப்பின் தேர்தல் பேரணிகளால் 30,000 பேருக்குத் தொற்று, 700 பேர் உயிரிழப்பு

டிரம்ப்பின் தேர்தல் பேரணிகளால் 30,000 பேருக்குத் தொற்று, 700 பேர் உயிரிழப்பு

2 mins read
e42a2be1-c540-43e2-abd3-79e0626d5512
-

அமெரிக்காவில் நாளை மறுநாள் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும் இப்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அந்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றின் ஆய்வு முடிவுகள் அமைந்து இருக்கின்றன. உலகிலேயே கொவிட்-19 தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான். இதுவரை அங்கு ஒன்பது மில்லியனுக்கு மேற்பட்டோரை கொரோனா தொற்றிவிட்டது; அவர்களில் 230,000க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் செப்டம்பர் 22ஆம் தேதி வரை இடம்பெற்ற அதிபர் டிரம்ப்பின் தேர்தல் பேரணிகளால் 30,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றி இருக்கலாம் என்றும் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கலிஃபோர்னியாவின் ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அந்தப் பேரணிகளில் பங்கேற்றவர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டது.

"முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற விதிமுறைகளுக்கு இணங்கி நடப்பது குறைவாக இருக்கும் நிலையில், பேரளவிலான ஒன்றுகூடல்களில் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் என்று பொதுச் சுகாதார அதிகாரிகள் விடுத்து வரும் எச்சரிக்கைகளையும் பரிந்துரைகளையும் எங்களது பகுப்பாய்வு வலுவாக ஆதரிக்கிறது. நோய், உயிர் என்ற வகையில் டிரம்ப்பின் தேர்தல் பேரணிகளில் பங்கேற்ற வர்கள் பெரும் விலைகொடுத்து இருக்கின்றனர்," என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொற்று அபாயம் குறித்து டிரம்ப்பின் பிரசாரக் குழு குறைத்து மதிப்பிட்டதால் அவரது தேர்தல் பேரணிகளில் முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற விதிகளைப் பலரும் பின்பற்றவில்லை என்றும் சொல்லப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையைச் சுட்டி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், "அதிபர் டிரம்ப்புக்கு உங்களைப் பற்றி அக்கறையில்லை. அவருடைய ஆதரவாளர்கள் மீதே அவருக்கு அக்கறையில்லை," எனக் கூறியிருக்கிறார்.

இதனிடையே, "முதல் சட்டத் திருத்தத்தின்படி அதிபரின் உரையைக் கேட்பதற்கு ஒன்றுகூட அமெரிக்கர்களுக்கு உரிமையுண்டு. எங்களது பிரசார நிகழ்ச்சிகளில் உடல்வெப்பநிலைப் பரிசோதனை, முகக்கவசம் அணிய வலியுறுத்தல், கைச்சுத்திகரிப்பான் பயன்பாடு எனப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தோம்," என்று டிரம்ப் பிரசாரக் குழுவின் பேச்சாளர் பரேலா விளக்கமளித்துள்ளார்.