சென்னையில் பிறந்து, சிங்கப்பூரில் பயின்ற பிரியங்காவிற்கு நியூசிலாந்து அமைச்சரவையில் இடம்

சென்னையில் பிறந்து, சிங்கப்பூரில் பயின்ற பிரியங்காவிற்கு நியூசிலாந்து அமைச்சரவையில் இடம்

2 mins read
e5f9ba49-10a1-40a0-a936-8456c65de3a0
-

கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பிரியங்கா ராதாகிருஷ்ணன், 41 (படம்), நியூசிலாந்து அமைச்சரவையில் இடம்பெற்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண்மணி என்ற வரலாற்றைப் படைத்து இருக்கிறார்.

தொழிலாளர் கட்சி சார்பில் இரண்டாம் முறையாக நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் திருமதி பிரியங்கா, சமூகம், தொண்டூழியம், இளையர், பன்முகத்தன்மை, இனச் சமூகங்கள் எனப் பல்வேறு துறைகளுக்கான அமைச்சராகவும் சமூக வளர்ச்சி, வேலைவாய்ப்பு இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராதாகிருஷ்ணன்-உஷா தம்பதியரின் மகளான இவர் சென்னையில் பிறந்தார். எர்ணாகுளம் மாவட்டம், பரவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும் இவருடைய உறவினர்கள் பலரும் இப்போதும் சென்னையில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

திருமதி பிரியங்கா கடந்த 14 ஆண்டுகளாகத் தொழிலாளர் கட்சியில் இருக்கிறார். சிங்கப்பூரில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், பின்னர் நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தில் முதுகலைக் கல்வி பயின்றார்.

கிறைஸ்ட்சர்ச் நகரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர் ரிச்சர்ட்சன் என்பவரை இவர் மணம் புரிந்தார். இவருடைய கொள்ளுத் தாத்தா இடதுசாரி அரசியலில் ஈடுபட்டவர் என்றும் கேரளா உருவானதில் முக்கிய பங்காற்றியவர் என்றும் சொல்லப்பட்டது.

முன்னதாக, இனச் சமூகங்கள் துறை அமைச்சராக இருந்த ஜென்னி சலேசாவின் தனிச் செயலாளராக திருமதி பிரியங்கா பணியாற்றினார். பின்னர் தொழிலாளர் கட்சியின் துணை நாயகராகவும் இவர் செயல்பட்டார்.

அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கருத்துரைத்த திருமதி பிரியங்கா, "இது மிகப் பெரிய கௌரவம். சமூகத்திற்குத் தொண்டாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பதை நான் பெரும்பேறாகக் கருதுகிறேன்," என்றார்.

இம்மாதம் 6ஆம் தேதி திருமதி பிரியங்கா அமைச்சர் பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.

கடந்த ஆண்டு நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டனுடன் இணைந்து தோன்றி, ஓணம் பண்டிகை வாழ்த்துகளைக் கூறியதை அடுத்து, கேரளா முழுக்க இவர் அறியப்பட்டார்.

இப்போதும் மலையாள மொழிப் பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்கும் இவர், முன்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாசின் பரம விசிறி.