இந்தோனீசியாவில் அண்மையில் பெரும் ஆர்ப்பாட்டங்களைக் கிளப்பிய சர்ச்சைக்குரிய தொழிலாளர் சட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோ ஒப்புதல் அளித்துள்ளார்.
மொத்தம் 1,187 பக்கங்களைக் கொண்டுள்ள இச்சட்டம் அக்டோபர் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருந்தது. அந்தச் சட்டத்தில் அதிபர் விடோடோ நேற்று கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார்.
அவர் அதில் கையெழுத்திடாவிட்டாலும் அது நிறைவேற்றப்பட்ட 30 நாட்களில் அது தானாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும்.
என்றாலும், இந்தச் சட்டத்தில் திரு விடோடோ கையெழுத்திட்டு இருப்பது, அதன் மீது அவர் கொண்டிருக்கும் கடப்பாட்டைக் காட்டுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்தத் தொழிலாளர் சட்டம் தங்களது உரிமைகளைப் பறிப்பதாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பலவீனப்படுத்துவதாகவும் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கள் கூறி வருகின்றனர்.

