இலங்கையில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஆடை தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 1,000க்கும் அதிகமான ஊழியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து, அங்கு கிருமி பரவியது எப்படி என்பதை விசாரணை நடத்த அந்நாட்டு தலைமைச் சட்ட அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா கிருமி பரவும் மையப் பகுதியாக கம்பஹா மாவட்டம் உருவெடுத்துள்ளது.
அங்கு 1,400 ஊழியர்கள் பணிபுரியும் இலங்கையின் ஆகப் பெரிய ஆடை தயாரிப்புத் தொழிற்சாலைகளில் ஒன்றான 'பிரான்டிக்ஸ்' எனும் தொழிற்சாலையில் ஊழியர்களிடையே கிருமி பரவும் நிலவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் மட்டும் 7,000க்கும் அதிகமானோருக்கு கிருமித்தொற்று உறுதியாகியுள்ளது. இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கையில் இது பாதி அளவுக்கும் அதிகமாகும்.
'பிரான்டிக்ஸ்' தொழிற்சாலையில் கிருமி பரவ ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்திடம் அலட்சிய போக்கு ஏற்பட்டதா என்பது விசாரிக்கப்படும் என்று குறிப்பிட்ட தலைமைச் சட்ட அதிகாரியின் ஒருங்கிணைப்பு அதிகாரியான நிஷாரா ஜெயரத்ன, இது தொடர்பான அறிக்கை இம்மாதம் 13ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகச் சொன்னார்.
இலங்கை முழுவதும் ஏறத்தாழ 35,000 ஊழியர்களைக் கொண்டிருக்கும் 'பிரான்டிக்ஸ்', 'பீனிக்ஸ் வென்சர்ஸ்' எனும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானது.
கிருமி பரவல் குறித்த தனது தனிப்பட்ட விசாரணையை 'பிரான்டிக்ஸ்' தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கேப்', 'விக்டோரியா சீக்ரெட்', 'மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்' போன்ற பிரபல சின்னங்களுக்கு 'பிரான்டிக்ஸ்' ஆடைகளை உற்பத்தி செய்கிறது.

