இரவில் தீப்பற்றிக்கொண்ட தமது வீட்டிலிருந்து தாம் உடனடியாக வெளியேற செல்லப்பிராணியாக வளர்க்கும் பச்சை கிளி தம்மைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டதாக ஆஸ்திரேலியரான அன்டோன் நுயன் என்பவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலம், பிரிஸ்பன் நகரில் உள்ள இவரது இரண்டு மாடி வீட்டில் நேற்று இரவு இவர் உறங்கிக்கொண்டிருந்தார்.
"திடீரென சத்தம் கேட்டதைத் தொடர்ந்து எனது கிளியின் அலறல் சத்தத்தைக் கேட்டு நான் விழித்தேன். புகை வாடை அடித்தது.
"கிளியைத் தூக்கிக்கொண்டு அறையின் கதவைத் திறந்தேன். வீட்டின் பின்புறம் தீப்பற்றிக்கொண்டதைப் பார்த்தேன். உடனடியாக கீழ்மாடிக்கு ஓட்டம் பிடித்தேன்," என்று திரு நுயன் கூறினார்.
தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்தை வந்தடைந்தபோது இவரது வீடு தீக்கிரையாகிவிட்டது. தீயை அணைக்க நான்கு தீயணைப்பாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் எடுத்தது.
வீட்டில் தனியாக வசிக்கும் திரு நுயன், கிளி மற்றும் ஒரு பையுடன் தாம் வெளியேறிவிட்டதாகவும் தமக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
திரு நுயனை எழுப்பிவிட இவரது கிளி "அன்டோன்," என்று இவரது பெயரை பலமுறை கூப்பிட்டதாகச் சொல்லப்படுகிறது. தீச்சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.