'வெப்பநிலை அதிகரிப்பால் குறைமாத பிரசவம், குழந்தை இறந்தே பிறப்பது அதிகரிப்பு'

'வெப்பநிலை அதிகரிப்பால் குறைமாத பிரசவம், குழந்தை இறந்தே பிறப்பது அதிகரிப்பு'

2 mins read
49792fec-f946-4445-a764-035b2f376c63
படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

கர்ப்பிணிகள் அதிக வெப்பமான சூழலில் இருப்பது, வெப்ப அலை உள்ள பகுதிகளில் வசிப்பது போன்றவை குறைமாத பிரசவம், குழந்தைகள் இறந்தே பிறப்பது போன்றவற்றுக்குக் காரணமாக இருப்பதாக இன்று (நவம்பர் 4) வெளியான ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

உலக வெப்பமயமாதலால் வெப்பநிலை அதிகரிக்கும் வெப்பமண்டலப் பகுதிகள், அடிக்கடி வெப்ப அலைகள் ஏற்படக்கூடிய ஏழ்மை நிறைந்த பகுதிகளில் இது அதிகம் காணப்படுவதாக பிஎம்ஜெ மருத்துவ சஞ்சிகை குறிப்பிட்டது.

"சிறிய அளவிலான வெப்பநிலை அதிகரிப்பு கூட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதிக வெப்பநிலைக்கு உட்படுவதும் அதிகரித்து வருகிறது," என்றது ஆய்வு.

ஒவ்வோர் ஆண்டும் 15 மில்லியன் குழந்தைகள் குறைமாதத்திலேயே பிறக்கின்றன. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பதற்கு குறை மாதத்தில் குழந்தைகள் பிறப்பது முக்கிய காரணம் என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது.

ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அத்தகைய உயிரிழப்புகள் அதிகம்.

அதிக வெப்பநிலை கர்ப்பிணிகளிடையே ஏற்படுத்தும் தாக்கதைக் கண்டறியும் நோக்கில் அனைத்துலக அளவில் ஆய்வாளர் குழு ஒன்று இந்த ஆய்வைத் தொடங்கியது.

ஜோஹன்னஸ்பர்கில் உள்ள விட்ஸ் குழந்தைப்பேறு சுகாதாரம் மற்றும் எச்ஐவி கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மேத்யூ செரிஸ் அந்தக் குழுவை வழி நடத்தினார். அந்தக் குழு 27 நாட்களில் தரவுகளைச் சேகரித்து இந்த ஆய்வை மேற்கொண்டது.

47 குறைமாதப் பிரசவ சம்பவங்களில் 40 கர்ப்பிணிகள் அதிக வெப்பநிலைக்கு உட்பட்டது தெரியவந்தது.

ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வுக்கு சுமார் 5% குறைமாத பிரசவங்கள் அதிகரித்ததாகவும் வெப்ப அலை ஏற்பட்ட நாட்களில் அந்த எண்ணிக்கை 16% வரை அதிகரித்ததாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

உலக வெப்பமயமாதலால் கடந்த பத்து ஆண்டுகளில் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளது.

வெய்யில் காலங்களில் வெப்பம் அதிகமான நாட்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் வெப்பநிலை அறிவியல் ஆலோசனைக் குழுவான ஐபிசிசி குறிப்பிடுகிறது.

குறிப்புச் சொற்கள்