மலேசியாவில் இருவகை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் உள்ள பகுதிகளுக்கு புதிய செயல்பாட்டு நடைமுறை வரையப்பட்டுள்ளதாக அந்நாட்டு மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் உள்ள பகுதிகளுக்கும் நாடு முழுவதும் நடப்பில் உள்ள மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என்று அவர் கூறினார்.
தேசிய பாதுகாப்பு மன்றம் அதன் சந்திப்பை நடத்தியதாகவும் புதிய செயல்பாட்டு நடைமுறை அடங்கிய பட்டியலை அது தயாரித்துள்ளது பற்றியும் திரு இஸ்மாயில் கூறியதாக தி ஸ்டார் இணையத்தளம் நேற்று செய்தி வெளியிட்டது.
மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமை தாங்கிய இந்தச் சந்திப்பின்போது இந்தச் செயல்பாட்டு நடைமுறை பரிந்துரைக்கப்பட்டது.
"செயல்பாட்டு நடைமுறை பின்னர் அறிவிக்கப்படும்போது பொதுமக்களிடையே குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க, அதைத் திருத்தி மேம்படுத்த தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம்," என்றார் திரு இஸ்மாயில்.
இன்னும் ஓரிரு நாட்களில் சிறப்புக் கூட்டம் மீண்டும் நடைபெறும்போது மன்றம் அதன் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.
இந்தச் செயல்பாட்டு நடைமுறை குறித்த மேல் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், தற்போது நடப்பிலுள்ள கட்டுப்பாடுகளைவிட அது கடுமையாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
நாட்டில் கொவிட்-19 நிலவரம் குறித்து இந்தச் சிறப்புக் கூட்டத்தில் கவலை தெரிவித்த பிரதமர் முகைதீன், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் உள்ள பகுதிகளில் செயல்பாட்டு நடைமுறையை மறுஆய்வு செய்ய அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகக் கூறினார்.
அரசாங்கம் ஏற்கெனவே எடுத்திருந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் கிருமி பரவல் கட்டுக்குள் இருந்ததைச் சுட்டிய அவர், தற்போதைய நிலவரத்தைக் கருதி மாற்று அணுகுமுறை தேவைப்படுவதாகச் சொன்னார்.

