இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மரியா தட்டில் ஆஸ்திரேலியாவின் பிரபஞ்ச அழகியாக முடிசூடியுள்ளார்.
ஒப்பனைக் கலைஞரான மரியா, 'மாடலிங்' செய்வதுட வலைப்பதிவாளராகவும் இருக்கிறார்.
மனநலம் மற்றும் நிர்வாகத் துறையில் பட்டக் கல்வி முடித்துள்ள மரியா, விக்டோரியா அரசாங்கத்தில் அலுவலராகப் பணிபுரிகிறார்.
அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தை 60,000 பேர் பின் தொடர்கின்றனர்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 'பிரபஞ்ச அழகி' போட்டியில் ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதிக்க உள்ளார் மரியா.
27 வயதான மரியா, மெல்பர்னில் பிறந்து வளர்ந்தவர். கொவிட்-19 சூழல் காரணமாக இணையம் வழியாக நடத்தப்படவிருந்த இறுதிச் சுற்று, பொதுமுடக்கம் நிறைவு பெற்றதையடுத்து, நேரடி நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது என்று விவரித்தார் மரியா.
இறுதிச் சுற்றை நேரலையாக இணையம் வழி பார்த்த மரியாவின் பெற்றோர், மரியாவை அழகியாகத் தேர்ந்தெடுத்ததும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.
இந்தியாவிலிருந்து மரியாவின் பெற்றோர் 90களின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தனர்.
"என் தந்தை கேரளாவைச் சேர்ந்தவர். அவரது உறவினர்களைப் பார்க்க நான் கேரளாவுக்குச் சென்றிருக்கிறேன்," என்று கூறும் மரியாவின் தாயார் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்.
மரியாவின் தாயாரோடு அவரது மொத்த குடும்பமும் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்ததால் பெரிய கூட்டுக் குடும்பத்தில் தாம் வளர்ந்ததாக மரியா குறிப்பிடுகிறார்.
தம்பியும் தானும் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தாலும் இந்திய கலாசாரத்துடன் வளர்ந்ததாக எஸ்பிஎஸ் ஹிந்தி பத்திரிகையிடம் தெரிவித்தார்.
கோழி பிரியாணியும் வெங்காய பஜ்ஜியும் தனக்கு மிகவும் பிடித்த உணவுகள் என்று கூறியுள்ளார் மரியா.

