அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக நேற்று முன்தினம் ஒரே நாளில் குறைந்தது 102,591 பேருக்கு மேல் கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.
பல மாநிலங்களிலும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டு வருவதாக அறியப்படுகிறது.
கொலராடோ, ஐடஹோ, மெய்ன், மிச்சிகன், இண்டியானா, ரோட் ஐலண்ட், மினசோட்டா, வாஷிங்டன், விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா தொற்று புதிய உச்சத்தைத் தொட்டது.
அதிபர் தேர்தலுக்கு மறுநாளான நேற்று முன்தினம் மட்டும் கிருமித் தொற்றால் 1,100க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகின.
வாக்கு எண்ணிக்கையின்போது காணப்பட்ட பதற்றமான சூழல், கொரோனா பாதிப்பின் தீவிரத்தன்மையை மறைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இப்போது அமெரிக்காவிலுள்ள மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் 50,000க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் இதுவே ஆக அதிகம் எனக் கூறப்படுகிறது.
வடக்கு டக்கோட்டா மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் ஆறு படுக்கைகள் மட்டுமே காலியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
தெற்கு டக்கோட்டா மாநிலத்தில், பரிசோதனை மேற்கொண்டோரில் பாதிப் பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியானது. அயோவா, வயோமிங் மாநிலங்களில் இவ்விகிதம் 40 விழுக்காடாக இருக்கிறது. குறிப்பாக, மத்திய மேற்கு வட்டாரத்தில் இப்போது கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் 30ஆம் தேதி அமெரிக்காவில் 100,233 தொற்றுச் சம்பவங்கள் பதிவானதே முந்தைய உச்சமாக இருந்தது.
அமெரிக்காவில் இதுவரை கிட்டத்தட்ட 9.5 மில்லியன் பேரை கொரோனா தொற்றிவிட்டது. அதனால் 233,000க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர்.

