வேலை இழந்தவருக்கு உதவ எண்ணி இணைய வர்த்தகத்தில் தடம் பதித்த சிறுவர்கள்

2 mins read
2b9bd1b4-0436-4e21-b5d9-05d7220f74a3
பன்னிரண்டு வயது தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஜிஷ்ணு மருதமுத்து, ராக்கேல் தனபாலன் (படுத்திருப்பவர்) ஆகிய இரு நண்பர்கள் மடிக்கணினியில் பல மணி நேரம் செலவளித்தாலும் அவர்களது பெற்றோர் வருத்தப்படுவதில்லை. படம் / செய்தி: தி ஸ்டார் -

பன்னிரண்டு வயது தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஜிஷ்ணு மருதமுத்து, ராக்கேல் தனபாலன் ஆகிய இரு நண்பர்கள் மடிக்கணினியில் பல மணி நேரம் செலவளித்தாலும் அவர்களது பெற்றோர் வருத்தப்படுவதில்லை.

- ஏனென்றால், அவர்கள் நிச்சயம் தங்களது நேரத்தை லாபகரமான முறையில் நல்ல காரியங்களுக்காக செலவிடுவர் என அவர்களது பெற்றோர் அறிந்திருப்பதே காரணம்.

ஆம்.

கடந்த மாதம் செப்டம்பரில் இந்திய பலகாரங்கள், இனிப்புகள், கேக்குகள் போன்றவற்றை விளம்பரப்படுத்தக்கூடிய cookeasy.my என்ற இணையத் தளத்தை உருவாக்கினர்.

ஜிஷ்ணுவின் உறவினர் அண்மையில் வேலை இழந்ததால், முருக்கு உள்ளிட்ட பலகாரங்களைச் செய்து விற்க முடிவு செய்தார்.

சமூக ஊடகங்களில் அந்த பலகாரங்களின் புகைப்படங்களைப் பதிவிட சிறுவர்களின் உதவியை நாடினார் அந்த மாது.

மலேசியாவில் கொவிட்-19 சூழல் காரணமாக அவரைப் போலவே பலரும் இதுபோல சிரமப்படுவதை புரிந்துகொண்ட சிறுவர் இருவரும் தங்களது நேரத்தை பலனுள்ள வகையில் செலவளிக்க எண்ணி, இணையப்பக்கம் தொடங்க எண்ணினர். அவர்களது உறவினர்களும் சிறுவர்களை ஊக்குவித்தனர்.

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை இணையம் வழி விளம்பரம் செய்வது, அவற்றை விற்பனை செய்வது போன்ற அங்கங்கள் அந்த இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டன. விநியோகச் சேவையும் உண்டு.

புதிய இணைய வர்த்தகத்தைத் தொடங்கிவிட்டனர் சிறுவர் இருவரும்.

இணையம் மூலம் பல தொழில், தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல் உத்திகளைக் கற்றுக்கொண்டதாகக் கூறுகின்றனர் சிறுவர்கள்.

இந்தச் சிறுவர்களுக்கு, ஜிஷ்ணுவின் தந்தை மருதமுத்து உதவியுள்ளார். அவர் ஒரு இணையம் வழி சந்தைப்படுத்தல் தொழில்நுட்ப நிறுவனத்தில் திட்ட மேலாளராகப் பணிபுரிகிறார்.

மலேசியாவில் தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தினமும் இணையம் வழியாக பாடம் படிக்கும் இவ்விருவரும் இணைய வர்த்தகத்துடன் தங்களுக்குப் பிடித்த இணைய விளையாட்டுகளையும் விட்டுவிடவில்லை.

தீபாவளி நெருங்கி வரும் வேளையில், அவர்களது வியாபாரமும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

உதவும் நோக்கத்துடன் வர்த்தகத்திலும் ஈடுபாடு கொண்டுள்ள அந்தச் சிறுவர்களை நாமும் வாழ்த்துவோம்!