கொவிட்-19 நோய்ப் பரவலை எதிர்கொள்வதற்காக 20 பில்லியன் ரிங்கிட் (S$6.5 பி.) சிறப்பு கொவிட்-19 நிதியை உருவாக்க மலேசியா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கொரோனா உதவிநிதித் தொகுப்புகள், முன்களப் பணியாளர்களுக்கான தேவைகள், தடுப்பூசிக் கொள்முதல் போன்ற வற்றுக்கு ஒதுக்கப்படும் தொகை 65 பில்லியன் ரிங்கிட்டாக உயரும் என்று திரு அஸிஸ் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அடுத்த ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பிரதமர் முகைதீன் யாசின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் வரவுசெலவுத் திட்டம் இது.
அதன்படி அடுத்த ஆண்டில் செலவு 322.5 பி. ரிங்கிட்டாகவும் வரவு 227.9 பி. ரிங்கிட்டாகவும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாண்டில் 6 விழுக்காடாக இருக்கும் நிதிப் பற்றாக்குறையை அடுத்த ஆண்டில் 5.4 விழுக்காடாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
நடப்பாண்டில் பொருளியல் 4.5% சுருங்கிய நிலையில் 2021ல் அது 6.5% முதல் 7.5% வரை வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல, இவ்வாண்டில் 5.2% சரிந்த ஏற்றுமதி அடுத்த ஆண்டில் 2.7% வளர்ச்சியடையலாம்.
இந்த ஆண்டில் 4.2 விழுக்காடாக இருக்கும் வேலையின்மை விகிதம் 2021ல் 3.5 விழுக்காடாகச் சரியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 100,000 சுகாதார அமைச்சு முன்களப் பணியாளர்களின் சேவையை மெச்சும் விதமாக அவர்களுக்கு ஒருமுறை மட்டும் 500 ரிங்கிட் சிறப்புத் தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆண்டு வருமானமாக 50,000 முதல் 70,000 வரை ஈட்டுவோருக்கான வருமான வரி 1% குறைக்கப்படவுள்ளது. இதனால் 1.4 மில்லியன் பேர் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் 25ஆம் தேதி வரவு செலவுத் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இடம்பெறும்.

